புதுச்சேரி : வில்லியனூர் அருகே நேற்று காலை பைக் மீது லாரி ேமாதிய விபத்தில் தந்தை கண்ணெதிரே 2 மகன்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கால் உடைந்த நிலையில் தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். விபத்தை தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு லாரி மீது கல்வீசி கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் அருகே உள்ள ெதாண்டமாநத்தம் ஆனந்த விநாயகர் நகர் ரங்கசாமி வீதியை சேர்ந்தவர் நடனசபாபதி (45). இவர் புதுச்சேரி கான்பெட் அரசு கூட்டுறவு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி அனிதா குடும்பத்தை கவனித்து வருகிறார். இவர்களுக்கு ஜீவா (14), துவாரகேஷ் (9) ஆகிய இரண்டு மகன்கள் இருந்தனர். ஜீவா 9ம் வகுப்பும், துவாரகேஷ் 4ம் வகுப்பும் முத்தரையர்பாளையம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் நடனசபாபதி தனது மகன்களை பள்ளியில் விடுவதற்காக பைக்கில் ஏற்றிக்கொண்டு ஊசுட்டேரி சாலையில் சென்று கொண்டிருந்தார். ஊசுட்டேரி, பொறையூர் செல்லும் சந்திப்பு அருகே சென்றபோது திருவக்கரையில் இருந்து மண் ஏற்றி வந்த டிப்பர் லாரி ஒன்று அதிவேகமாக வந்து நடனசபாபதியின் பைக்கின் பின்பக்கம் மோதியது. இதில் நடனசபாபதி இடதுபக்கமும், மாணவர்கள் ஜீவா, துவாரகேஷ் ஆகிய இருவரும் வலது பக்கமும் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
அப்போது டிப்பர் லாரியின் பின்பக்க சக்கரம் மாணவர்கள் மீது ஏறி இறங்கியதில் இருவரும் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே தந்தை கண் முன்னே துடிதுடித்து
பரிதாபமாக இறந்தனர். நடனசபாபதிக்கு கால் நசுங்கியது. அவர் வலியால் அலறி துடித்தார். உடனே அங்கிருந்தவர்கள் ஆம்புலன்சை வரவழைத்து அவர்களை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நடனசபாபதிக்கு கால் உடைந்ததால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்ததும் வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் தேங்காய்திட்டு வைத்தி என்பவருக்கு சொந்தமான டிப்பர் லாரியை கடலூரை சேர்ந்த ஜெயக்குமார் (60) என்பவர் ஓட்டி வந்து விபத்து ஏற்படுத்தியது தெரியவந்தது.
இதற்கிடையே அங்கிருந்த பொதுமக்கள், சிறுவர்கள் உயிரிழந்ததை பொறுக்க முடியாமல் விபத்து ஏற்படுத்திய டிப்பர் லாரியின் கண்ணாடியை கல்லால் அடித்து உடைத்தனர். லாரி டிரைவர் ெஜயகுமாரும் மக்களால் தாக்கப்பட்டு கால் உடைந்த நிலையில் மருத்துவனையில் சேர்க்கப்பட்டார். அவரை போலீசார் கைது செய்து போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ந்து பொதுமக்கள் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த போக்குவரத்து சீனியர் எஸ்பி பிரவீன்குமார் திரிபாதி, மேற்கு எஸ்பிக்கள் வம்சிதரெட்டி, மோகன்குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பகுதியில் தொடர்ந்து விபத்து ஏற்படுவதாகவும், போலீசார் யாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவதில்லை என்றும் குற்றம் சாட்டினர்.
பிறகு இங்கு வேகத்தடைகள் அமைக்க வேண்டும், பேரிகார்டுகள் வைக்க வேண்டும், மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் நேரங்களில் கனரக வாகனங்கள் இயக்க கூடாது என கோரிக்கை வைத்தனர். இதனை ஏற்ற காவல்துறை அதிகாரிகள் உடனடியாக அங்கு பேரிகார்டுகள் கொண்டு வந்து சாலையில் வைத்தனர்.
மேலும் காலை 7 மணி முதல் 10 மணிவரையிலும், மாலை 4 மணி முதல் 6 மணிவரையிலும் கனரக வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்படும் என உறுதியளித்தனர். இதனை ஏற்ற பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
‘‘நிவாரணம் வழங்க வேண்டும்’’
தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உயிரிழந்த மாணவர்களுக்கு உடனடியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நிவாரண உதவித்தொகையை அறிவித்தார். ஆனால் புதுவையில் பைக் மீது லாரி மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழிந்த மாணவர்களுக்கு புதுவை முதல்வர் ரங்கசாமி உடனடியாக நிவாரணத்தை அறிவித்து அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
The post வில்லியனூர் அருகே தந்தை கண் முன்னே பைக் மீது லாரி மோதி 2 சிறுவர்கள் பலி appeared first on Dinakaran.
