ஊட்டியில் பெய்யும் சாரல் மழையால் குளிர்: சாலையோர மரங்களால் விபத்து அபாயம்

ஊட்டி: நீலகிரியில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை சற்று முன்னதாகவே துவங்கியது. கடந்த மே மாதம் இறுதி வாரத்தில் துவங்கிய மழை சில நாட்கள் கனமழையாக கொட்டியது. ஆனால், இந்த மழை தொடரவில்லை. கடந்த மாதம் ஒரு சில நாட்கள் மட்டுமே கனமழை பெய்தது. பெரும்பாலான நாட்கள் லேசான சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. அதேசமயம், நீர் பிடிப்பு பகுதிகளில் மட்டும் தினமும் ஓரளவு மழை பெய்து வருகிறது. இதனால், பெரும்பாலான அணைகள் தற்போது நிரம்ப துவங்கியுள்ளன. இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக நீலகிரி மாவட்டத்தில் காலநிலையில் மாற்றம் ஏற்பட்டு காற்றுடன் சாரல் மழை பெய்து வருகிறது.

குறிப்பாக, ஊட்டி, பைக்காரா, நடுவட்டம், கிளன்மார்கன் போன்ற பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. நேற்றும் ஊட்டி, குந்தா ஆகிய பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது. இதன் காரணமாக குளிர் சற்று அதிகமாக காணப்பட்டது. உள்ளூர் மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் வெம்மை ஆடைகளுடன் வலம் வந்தனர். இந்நிலையில், காற்றுடன் மழை பெய்வதால், சாலையேரத்தில் உள்ள அபாயகரமான மரங்கள் விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, இந்த மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என பொது மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post ஊட்டியில் பெய்யும் சாரல் மழையால் குளிர்: சாலையோர மரங்களால் விபத்து அபாயம் appeared first on Dinakaran.

Related Stories: