மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உரிமையாளரான பாஜக பிரமுகரை கொன்ற குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: பீகாரில் திடீர் திருப்பம்


பாட்னா: பீகாரில் மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உரிமையாளரான பாஜக பிரமுகரை கொன்ற குற்றவாளிகளில் ஒருவனை போலீசார் என்கவுன்டரில் சுட்டுக்கொன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. பீகார் மாநிலத்தின் தலைநகர் பாட்னாவைச் சேர்ந்த பிரபல தொழிலதிபரும், பாஜக பிரமுகருமான கோபால் கெம்கா என்பவர், கடந்த வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டின் வாசலிலேயே காரில் இருந்தபோது மர்ம நபரால் சுட்டுக் கொல்லப்பட்டார். மருத்துவமனை மற்றும் பெட்ரோல் பங்க்குகளின் உரிமையாளரான இவரது படுகொலை, மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விரைவில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் வேளையில் நடந்த இந்தச் சம்பவம், ஆளும் முதல்வர் நிதிஷ் குமார் அரசுக்கு பெரும் நெருக்கடியை உருவாக்கியது. மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக எதிர்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு நிலத்தகராறு காரணமாக கோபால் கெம்காவின் மகன் ரவுனக் கெம்காவும் கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. கோபால் கெம்கா கொலை வழக்கில் தீவிர விசாரணை நடைபெற்று வந்த நிலையில், அவரை சுட்டுக் கொன்ற முக்கிய குற்றவாளியான உமேஷ் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

கூலிப்படையை சேர்ந்த மற்றொரு நபரையும் பிடித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில், நேற்று இரவு பாட்னாவின் மல்சலாமி பகுதியில் நடந்த போலீஸ் என்கவுன்டரில், இந்த வழக்கில் தொடர்புடைய மற்றொரு முக்கிய குற்றவாளியான விகாஸ் என்பவர் சுட்டுக் கொல்லப்பட்டார். கோபால் கெம்கா கொலை சம்பவம் அரசியல் ரீதியாக பீகாரில் விமர்சிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு ஒரு குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மருத்துவமனை, பெட்ரோல் பங்க் உரிமையாளரான பாஜக பிரமுகரை கொன்ற குற்றவாளி என்கவுன்டரில் சுட்டுக்கொலை: பீகாரில் திடீர் திருப்பம் appeared first on Dinakaran.

Related Stories: