கடலூர் : கடலூர் அருகே செம்மங்குப்பம் பகுதியில் தனியார் பள்ளி வாகனம் மீது ரயில் மோதி 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். 3 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி ஒரு சிறுவர் உயிரிழந்துள்ளார். 2 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, ரயில்வே துறை சார்பில் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், “ரயில் மோதி பள்ளி வாகனம் விபத்துக்குள்ளானதற்கு ரயில்வே கேட் மூடப்படாமல் இருந்ததே காரணம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, தமிழ்நாடு காவல்துறை சார்பில் நடத்தப்பட்ட விசாரணையில், விபத்தில் சிக்கி உயிர் தப்பிய மாணவர் மற்றும் பள்ளி வாகன ஓட்டுநர் இருவரும், “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது” என வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பள்ளி வேன் ஓட்டுநர் சங்கர் பேசுகையில், “நான் போகும்போதே ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது.கேட்டை மூட வேண்டாம் என நான் கேட் கீப்பரிடம் சொல்லவே இல்லை. ரயில் ஹாரன் சத்தம் கூட அடிக்கல. கேட் கீப்பரும் அந்த இடத்தில் இல்லை. ரயில்வே கேட் மூடி இருந்தால் நான் சென்றிருக்க மாட்டேன்.”இவ்வாறு தெரிவித்தார். அதேபோல், காயங்களுடன் சிகிச்சைப் பெற்று வரும் மாணவர் விஸ்வேஷ்,”ரயில்வே கேட் திறந்தே இருந்தது; ரயில் வரும் சத்தம் கேட்கவே இல்லை. வழக்கமாக மூடப்பட்டிருக்கும் ரயில்வே கேட் இன்று திறந்தே இருந்தது. விபத்து நடந்த பிறகும் கேட் கீப்பர் வெளியே வரவே இல்லை”இவ்வாறு தெரிவித்தார்.
The post “ரயில்வே கேட் திறந்துதான் இருந்தது!” : பள்ளி வாகன விபத்தில் உயிர் தப்பிய ஓட்டுநர், மாணவர் வாக்குமூலம்! appeared first on Dinakaran.
