கோயிலில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததால் சர்ச்சை.. வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: விசிக எம்.பி. ரவிக்குமார்!!

சென்னை: வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும் என விசிக எம்.பி. ரவிக்குமார் தெரிவித்துள்ளார். ஸ்ரீபெரும்புதூருக்கு அருகே உள்ள வல்லக்கோடை முருகன் கோயில் குடமுழுக்கில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அனுமதிக்கப்படாதது சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. தமிழிசை சௌந்தரராஜனுக்கு குடமுழுக்கு விழாவில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டு; செல்வப்பெருந்தகை தடுக்கப்பட்டிருக்கிறார். ‘இது 2000 ஆண்டுகளாக நீடிக்கும் பிரச்னையை ஒரே நாளில் தீர்த்துவிட முடியாது; அதிகாரிகள் மெத்தனப்போக்கை கடைபிடித்துள்ளனர்; முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கக் கூடாது என்பதால் மக்களோடு மக்களாக தரிசித்தேன் என செல்வப்பெருந்தகை ஆதங்கத்தோடு பேசியிருக்கிறார்.

இந்நிலையில், வல்லக்கோடை முருகன் கோயில் குடமுழுக்கில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததற்கு விசிக எம்.பி. ரவிக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை அவர்களை சாதி அடிப்படையில் தடுத்து நிறுத்தினார்களா? அதற்குக் காரணமான அதிகாரிகள் யார் ? என்பதை அறிய முதலமைச்சர் விசாரணைக்கு உத்தரவிடவேண்டும். அறநிலையத்துறை அதிகாரிகள் தவறு செய்திருந்தால் அவர்கள் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் . தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத்துறைக் கோயில்களில் தொடரும் வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க உறுதியான நடவடிக்கை தேவை என அவர் கூறியுள்ளார்.

The post கோயிலில் செல்வப்பெருந்தகையை அனுமதிக்காததால் சர்ச்சை.. வழிபாட்டுத் தீண்டாமையை ஒழிக்க வேண்டும்: விசிக எம்.பி. ரவிக்குமார்!! appeared first on Dinakaran.

Related Stories: