‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்’ 15ம் தேதி முதல் வழங்கலாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வீடு, வீடாக விநியோகம்

*45 நாளில் நடவடிக்கை, கலெக்டர் சுகுமார் தகவல்

நெல்லை :‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்’ மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வழங்கும் பணிகளை கலெக்டர் சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

நெல்லை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் குறித்த துண்டு பிரசுரங்கள் மற்றும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாத மகளிர்களுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகைக்கான விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று வழங்கும் பணிகள் நேற்று தொடங்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து நெல்லை மாநகராட்சி டவுண் தமிழ் சங்கம் தெரு பகுதியில் மகளிர் குழுவினர் விண்ணப்பங்கள் வழங்குவதை கலெக்டர் சுகுமார் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் தமிழ்நாடு முதல்வர் மக்களின் குறைகளைத் தீர்க்க அவர்களின் பகுதியிலேயே நேரடியாக சென்று முகாம்கள் நடத்தி கோரிக்கை மனுக்களை பெற, ‘உங்களுடன் ஸ்டாலின்’ என்ற திட்டத்தை வரும் ஜூலை 15 ஆம் தேதி துவக்கி வைக்கிறார்.

ஏழை, எளிய மக்களின் வசதிக்கேற்ப அவர்களின் பகுதிகளுக்கு அருகிலேயே தங்கள் குறைகளையும், கோரிக்கை மனுக்களையும் மற்றும் நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான விண்ணப்பங்கள் பூர்த்தி செய்து வழங்குவதற்கு ஏற்ற வகையில் “உங்களுடன் ஸ்டாலின்“ திட்டம் நடக்கிறது.

இம்முகாமில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, மின்சாரத்துறை, கூட்டுறவு, உணவு நுகர்வோர் பாதுகாப்புத் துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை, கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளம் மற்றும் மீனவர் நலத் துறை, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை போன்ற துறைகள் மூலம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட அரசு மற்றும் அரசு துறை சார்ந்த சேவைகள் தொடர்பான கோரிக்கை மனுக்கள் பெறுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.

நகர்பகுதிகளில் 13 அரசுத்துறைகளின் 43 சேவைகளும், கிராமப்பகுதிகளில் 15 அரசு துறைகளின் 46 சேவைகளும் வழங்கப்பட உள்ளது.

நெல்லை மாவட்டத்தில் வருகிற 15ம் தேதி தொடங்கி அக்.7ம் தேதி வரை 255 முகாம்கள் நடக்கிறது. நெல்லை மாநகர பகுதிகளில் 38 இடங்களிலும், நகர்ப்புறங்களில் 29 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 34 இடங்களிலும், ஊரக பகுதிகளில் 154 இடங்களிலும் என மொத்தம் 255 இடங்களில் முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு பூர்த்தி செய்யயப்பட்ட விண்ணப்பங்களை உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில் வழங்க வேண்டும். இம்முகாம்களில் வழங்கப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இத்திட்டம் குறித்த விவரங்கள் பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக ‘உங்களுடன் ஸ்டாலின்” திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் வீடு, வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இக்குழுவினர்களுக்கு முறையாக பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.

கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறாத நபர்களுக்கு விண்ணப்பங்களை வழங்கி அதனை பூர்த்தி செய்வதற்கான வழிமுறைகளையும், உதவிகளையும், ஆலோசனைகளையும் வழங்கி வருகின்றனர். இந்தப் பணிகளை நெல்லை டவுண் பகுதியில் கலெக்டர் சுகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

The post ‘உங்களுடன் ஸ்டாலின் முகாம்களில்’ 15ம் தேதி முதல் வழங்கலாம் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பம் வீடு, வீடாக விநியோகம் appeared first on Dinakaran.

Related Stories: