தர்மபுரி : தினகரன் செய்தி எதிரொலியாக, தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் இருந்த தடுப்பணையில் ஆண்டுகணக்கில் தேங்கிய கழிவுநீர் வெளியேற்றப்பட்டது. தர்மபுரி கலெக்டர் அலுவலகம் அருகே, வத்தல்மலை சாலையில் 3 ஊராட்சிகள் சந்திக்கும் எல்லையில் ராமன்நகர் தடுப்பணை உள்ளது. உரங்காரனஅள்ளி, தடங்கம், இலக்கியம்பட்டி ஊராட்சிகள் சந்திக்கும் இடத்தில் ராமன்நகர் தடுப்பணை உள்ளது. இந்த தடுப்பணை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
இந்த தடுப்பணை வழியாக பல ஆண்டுகளுக்கு முன் சுகாதாரமான தண்ணீர் சென்றதால், ஆடி 18 போன்ற விஷேச காலங்களில் மக்கள் குளித்துள்ளனர். இந்த நீர்வழித்தடத்தில் வத்தல்மலையில் பெய்யும் மழைநீர் லளிகம் ஏரி, நார்த்தம்பட்டி ஏரி, அதியமான்கோட்டை சோழவராயன் ஏரி, ஏ.ஜெட்டிஅள்ளி ஏரியை நிரப்பியவாறு, இலக்கியம்பட்டி ஏரியை நோக்கி ஓடி வரும்.
இப்போது இந்த ஏரிக்கு வரும் நீர்வழித்தடங்கள் புதர் மண்டியும், ஆக்கிரமிப்பின் பிடியிலும் சிக்கியுள்ளன. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நிதி ஆதாரம் இல்லை என்று கூறி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ராமன்நகர் தடுப்பணையில் நீர் நிரம்பி உபரிநீர் இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்லும். தற்போது இந்த தடுப்பணையில் செடி, கொடிகள் புதர்மண்டி கிடக்கின்றன.
நேருநகர், அரசு கலைக்கல்லூரி, உள்ளிட்ட சுமார் ஒருகிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆயிரக்கணக்கான வீடுகளிலிருந்தும், கடைகளிலிருந்தும் வெளியேறும் கழிவுநீர் இந்த தடுப்பணையில் வந்து கலக்கிறது. ஆனால் இந்த கழிவுநீர் வெளியே செல்ல வடிகால் இல்லாததால், இந்த கழிவுநீர் பல ஆண்டுகளாக தேங்கியது. கழிவுநீரில் கொசு உற்பத்தியாகி, தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் கழிவுநீர் தேங்கி நிற்பதால், நிலத்தடி நீரும் பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழைக்காலத்தில், இந்த தடுப்பணையில் இருந்து பாம்புகள் குடியிருப்புகளுக்கு வந்துவிடுகின்றன. மேலும் தவளை, அட்டை பூச்சிகளும் அதிகம் வருகின்றன. எனவே மாவட்ட கலெக்டர் இந்த தடுப்பணையை நேரில் ஆய்வு செய்து ஆண்டு கணக்கில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் கிராமமக்கள் கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று கடந்த வாரம் பொதுப்பணித்துறை, தடுப்பணையில் தேங்கியிருந்த கழிவுநீரை வெளியற்றியது. பின்னர் நீர் செல்லும் கால்வாய் தூர்வாரப்பட்டது.
அதன்பின் ஊரகத்துறை சார்பில், இலக்கியம்பட்டி ஏரிக்கு செல்லும் கால்வாயை தூர்வாரியது. ஆனால் 100 மீட்டர் தூர்வாரப்படவில்லை. இலக்கியம்பட்டிக்கு செல்லும் கால்வாயை முழுவதுமாக தூர்வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
The post கலெக்டர் அலுவலகம் அருகே தடுப்பணையில் தேங்கி நின்ற கழிவுநீர் அகற்றம் appeared first on Dinakaran.
