குன்னூர்- ஊட்டி சாலையில் லாரி கொக்கியில் சிக்கி பெயின்டர் பரிதாப பலி

குன்னூர் : நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகேயுள்ள உபதலை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் மெல்கியூ ராஜன் (55). பெயின்டர். இவர், தினமும் காலை நேரத்தில் குன்னூர் சாலையில் உள்ள தேவாலயத்திற்கு சென்று ஜெபம் செய்தபின் பணிக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.

அதேப்போல் நேற்று காலையும் மெல்கியூ ராஜன், தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் பாய்ஸ் கம்பெனி பகுதியை நோக்கி சென்றபோது பாய்ஸ் கம்பெனி அருகே ஊட்டியை நோக்கி சென்று கொண்டிருந்த லாரி, இருசக்கர வாகனத்தை முந்தி சென்றபோது லாரியின் இடதுபுறத்தில் உள்ள இரும்பு கொக்கியில் மெல்கியூராஜன் மாட்டி, சாலையில் தரதரவென இழுத்து செல்லப்பட்டார்.

உடனடியாக லாரி ஓட்டுநர் லாரியை நிறுத்திவிட்டு, இறங்கி வந்து பார்த்தபோது இருசக்கர வாகனத்தை ஓட்டிவந்த மெல்கியூ ராஜன் மயங்கிய நிலையில் இருந்தார். அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் குன்னூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இருப்பினும் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார். வெலிங்டன் போலீசார், லாரி ஓட்டுனர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

The post குன்னூர்- ஊட்டி சாலையில் லாரி கொக்கியில் சிக்கி பெயின்டர் பரிதாப பலி appeared first on Dinakaran.

Related Stories: