விழுப்புரம் அருகே வளவனூரில் 40 வீடுகளை காலி செய்ய ரயில்வே நோட்டீஸ்

*மாற்று இடம் கோரி ஆட்சியரிடம் மனு

விழுப்புரம் : விழுப்புரம் அருகே வளவனூர் பேரூராட்சி தொட்டிபகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று ஆட்சியரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, வளவனூர் ரயில்நிலைய பகுதியில் கடந்த 1960ம் ஆண்டு தமிழ்நாடு அரசு மூலம் தூய்மைபணியாளர்களுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டு அங்கு 40 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் ரயில்நிலையத்தையொட்டி அமைந்துள்ள வாய்க்கால் ஓரப் பகுதிகள், சாலையோரங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரயில்வே நிர்வாகத்தினர் வளவனூர் ரயில்நிலையத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களை அந்த இடத்திலிருந்து வெளியேறுமாறு ரயில்வே நிர்வாகம் கூறி வருகிறது. தினக்கூலி அடிப்படையில் வேலை செய்துவரும் ஏழை, எளிய மக்களுக்கு மாற்று இடம்கூட தராமல் ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.

இதுகுறித்து பலமுறை ஆட்சியர் அலுவலகத்தில் மனுஅளித்துள்ளோம். ரவிக்குமார் எம்பியும் ஒன்றிய ரயில்வே அமைச்சரிடம் மனுஅளித்துள்ளார். தற்போது வீட்டை காலிசெய்ய ரயில்வே நிர்வாகம் நோட்டீஸ் வழங்கியுள்ளனர். எனவே, ஆட்சியர் நடவடிக்கை எடுத்து மாற்று இடம் வழங்கிட வேண்டுமென அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்ட பாதுகாப்பு தேவை……

இதனிடையே அதேபகுதியை சேர்ந்த 19 குடும்பத்தினர் நேற்று தனியாக ஒருமனு அளித்தனர். அதில், 2021ம் ஆண்டு அரசு சார்பில் 19 குடும்பத்தினருக்கு பக்கமேடுபாதை மின்சாரவாரிய அலுவலகம் அருகே பட்டா வழங்கப்பட்டது.

தற்போது ரயில்வே நிர்வாகம் நாங்கள் ஏற்கனவே இருந்த இடத்தினை காலிசெய்ய நோட்டீஸ் வழங்கியதால் அரசு வழங்கிய பட்டாவில் வீடு கட்ட உள்ளோம். ஆனால், அந்த இடத்தை ஆக்கிரமித்த நபர் அந்த இடம் அவருக்குதான் சொந்தமானது என்று தகராறு செய்து வருகிறார். இதனால் வீடு கட்டமுடியாத நிலை உள்ளது. இதற்கும் மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

The post விழுப்புரம் அருகே வளவனூரில் 40 வீடுகளை காலி செய்ய ரயில்வே நோட்டீஸ் appeared first on Dinakaran.

Related Stories: