ஓசூர் : ஓசூர் அருகே குண்டும் குழியுமான சாலையை சொந்த செலவில் சீரமைத்தவருக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகேயுள்ள காமன்தொட்டிக்கு 20க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் அரசு மருத்துவமனை, தபால் நிலையம், வங்கி சேவைக்காகவும் பள்ளி, கல்லூரிகளுக்கும் வேலைக்கும் வந்து செல்கின்றனர். இங்குள்ள சாலை குண்டும் குழியுமாக காணப்பட்டது.
மழையின்போது சாலையில் தண்ணீர் தேங்கி வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில், காமன்தொட்டி கங்காபுரம் கிராமத்தை சேர்ந்த மகேஷ் என்பவர், தனது சொந்த செலவில் காமன்தொட்டி அரசு மருத்துவ மனை சாலை, தாசனபுரம் சாலையை சீரமைத்தார்.
சாலைகளில் காணப்பட்ட குழிகளை தார் மூலம் மூடினார். இப்பணியில் 5க்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டனர். இவரது செயலுக்கு அப்பகுதி மக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
The post ஓசூர் அருகே சிதிலமடைந்த தார் சாலையை சொந்த செலவில் சீரமைத்த வாலிபர் appeared first on Dinakaran.
