தூத்துக்குடி : தூத்துக்குடி மாநகரில் மழை காலத்திற்கு முன்பாக புதிதாக 957 சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக தார்சாலைகள், பேவர்பிளாக் சாலைகள், தெருவிளக்குகள், பூங்காக்கள், மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய், உயர்மின்கோபுர விளக்குகள், ரவுண்டானாக்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தந்தை பெரியார்நகர், செயின்ட் மேரிஸ் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் புதிதாக தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை பணிகள் துவங்கப்படுகிறது.
இதையொட்டி அப்பகுதிகளை மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறுகையில் ‘‘தூத்துக்குடி மாநகரில் ஏற்கனவே 2500 சாலைகள் போடப்பட்டுள்ளது. தற்போது 4 அடி குறுகிய தெருக்கள் உள்பட 957 சாலைகள் (தார் சாலை மற்றும் பேவர் பிளாக் சாலை) புதிதாக அமைக்கப்படவுள்ளது.
இதற்கான பணிகள் விரைவில் துவங்கப்படும். வரும் மழை காலத்திற்கு முன்பாக இப்பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது’’ என்றார்.ஆய்வின்போது, மண்டல தலைவரும், பகுதி செயலாளருமான நிர்மல்ராஜ், மாமன்ற உறுப்பினர்கள் ஜெயசீலி, அந்தோனி மார்ஷலின், திமுக வட்டச் செயலாளர் குமார், வட்ட பிரதிநிதி கருப்பசாமி, போல்பேட்டை பிரதிநிதி ஜேஸ்பர் ஞானமார்ட்டின் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
The post தூத்துக்குடியில் மழை காலத்திற்கு முன்பாக புதிதாக 957 சாலைகள் அமைக்க நடவடிக்கை appeared first on Dinakaran.
