சம்பவத்தன்று திருப்புவனம் போலீசாருடன் இணைந்து அப்பகுதியை சேர்ந்த பிரமுகர்கள், கோயிலில் உள்ள சிசிடிவி காட்சிகளை எடுத்துள்ளனர். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பிரேத பரிசோதனையின்போது காயங்களை மறைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். சிலர் அஜித்குமாரின் உடலை பெற்றுக் கொள்ளுமாறும், உரிய பணம் பெற்று தருவதாகவும் அவரது குடும்பத்தினரிடம் கட்டப்பஞ்சாயத்து செய்துள்ளனர்.
எனவே, மனித உரிமைக்கு எதிரான சட்டவிரோத காவல் மரணங்களை தடுக்க உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பிறப்பிக்க வேண்டும். கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டோர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர், அஜித்குமார் மரணம் தொடர்பான அனைத்து வழக்குகளும் இன்று விசாரணைக்கு வர உள்ளதால், இந்த மனுவையும் அதனுடன் சேர்த்து விசாரிப்பதாகக் கூறி தள்ளி வைத்தனர்.
* நகைகள் திருட்டு குறித்து நிகிதாவின் புகார் என்ன? வழக்கு விபரம் வெளியானது
நகை திருட்டு தொடர்பாக நிகிதா அளித்த புகாரின்பேரில் திருப்புவனம் போலீசார் பதிவு செய்துள்ள வழக்கின் விபரம் வெளியாகியுள்ளது. அதில், ‘‘நான் திண்டுக்கல் எம்விஎம் அரசு கலைக்கல்லூரியில் பேராசிரியையாக பணியாற்றி வருகிறேன். இன்று (ஜூன் 27) நானும், எனது அம்மா சிவகாமியும் மடப்புரம் காளியம்மன் கோயிலுக்கு காரில் வந்தோம். அப்போது, எனது தாயாரின் வயது முதிர்வை பயன்படுத்தி அஜித்குமார் என்பவர், அறநிலையத்துறை சீருடை அணிந்து வந்து என்னிடம், உங்கள் காரை நான் நிறுத்தி வருகிறேன் எனக் கூறி வற்புறுத்தி காரின் சாவியை கேட்டார்.
இதையடுத்து, அவரிடம் எனது கார் சாவியை கொடுத்துவிட்டு சாமி தரிசனம் முடித்து வந்து, எனது காரில் இருந்த பேக்கை பார்த்தபோது அதில் இருந்த கருமாரி கல் முகப்பு தாலிச்செயின் 6 பவுன், இரண்டு வளையல் 2.5 பவுன், இரண்டு கல் மோதிரம் ஒரு பவுன் என மொத்தம் 9.5 பவுன் நகையை காணவில்லை. எனது புகார் மனுவினை ஏற்று எனது நகை 9.5 பவுனை கண்டுபிடித்து தருமாறு கேட்டுக் கொள்கிறேன்’’ என நிகிதா கூறியிருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
* சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்க வேண்டும்: தியாகு பேட்டி
திருப்புவனத்தில் அஜித்குமார் வீட்டிற்கு, காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்க ஒருங்கிணைப்பாளர் தியாகு நேற்று வந்து, தாய் மாலதி, தம்பி நவீன்குமாருக்கு ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘தமிழக அரசு காவல்துறை சித்ரவதைக்கு எதிராக சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும். தூத்துக்குடி சம்பவத்திலும் நாங்கள் சிபிஐ விசாரணையை கேட்கவில்லை. சிபிஐ மீது எங்களுக்கு நம்பிக்கையும் இல்லை. இவ்வழக்கை நீதிமன்ற கண்காணிப்புடன் கூடிய சிறப்பு புலனாய்வு குழு விசாரித்தால் சில மாதங்களில் முடிக்க முடியும்’’ என்றார்.
தொடர்ந்து அஜித்குமார் வீட்டுக்கு அய்யா வைகுண்டர் தலைமைபதி மகா சன்னிதானம் பாலபிரஜாபதி அடிகளார் சென்று அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறி ஆசி வழங்கினார்.
* மீண்டும் பணியில் சேர்ந்தார் நிகிதா விரைவில் நடவடிக்கை?
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மீது புகார் அளித்த நிகிதா, திண்டுக்கல் – தாடிக்கொம்பு சாலையில் உள்ள எம்விஎம் அரசு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பேராசிரியராகபணியாற்றி வருகிறார். மடப்புரம் சம்பவத்துக்கு பின், நிகிதா 10 நாட்களாக கல்லூரிக்கு செல்லாமல் விடுமுறையில் இருந்தார். விடுமுறை முடிந்த நிலையில் நேற்று மீண்டும் பணிக்கு திரும்பி வகுப்புகளும் நடத்தினார்.
அஜித்குமார் இறப்பு வழக்கில் பேராசிரியை நிகிதா மீது விரைவில் துறைரீதியாக நடவடிக்ைக எடுக்கப்படுமென உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் கூறியிருந்தார். இதன்படி, அவர் மீது எந்நேரமும் நடவடிக்கை பாயும் என கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.
* கோயில் ஊழியர்களிடம் இன்ஸ்பெக்டர் விசாரணை
மடப்புரம் கோயில் ஊழியர் அஜித்குமார் மரணம், கொலை வழக்காக மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் திருப்புவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார், மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயில் பணியாளர்களான பிளம்பர் கண்ணன், டிரைவர் பெரியசாமி ஆகியோரிடம் நேற்று ஒரு மணி நேரம் விசாரணை செய்தார். தொடர்ந்து கோயிலில் உள்ள பிற ஊழியர்களிடமும் விசாரணை செய்யப்படும் என தெரிகிறது.
The post கோயில் காவலாளி இறப்பு சம்பவம் கட்டப்பஞ்சாயத்து செய்தோர் மீது நடவடிக்கை கோரி வழக்கு: ஐகோர்ட் கிளையில் இன்று விசாரணை appeared first on Dinakaran.
