நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்: கட்டிட அனுமதிக்கான ஆணைகளை பெற்ற பயனாளிகள் முதல்வருக்கு நன்றி

சென்னை: கடந்த ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில், சுயசான்றிதழ் மூலமாகப் பொதுமக்கள் கட்டிட அனுமதி பெறுவதற்குப் புதிய வசதி அறிமுகப்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சார்பில், தமிழ்நாட்டில் முதல் முறையாக பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினர் மற்றும் நடுத்தர வர்க்க மக்கள் இணைய தளம் வாயிலாகச் சுயசான்றிதழ் அடிப்படையில் அதிகபட்சம் 2,500 சதுர அடி பரப்பளவு கொண்ட மனையிடத்தில் 3,500 சதுர அடி அளவிற்குள் கட்டப்படும் குடியிருப்பு கட்டுமானத்திற்கு உடனடி ஒப்புதல் பெறும் சுயசான்றிதழ் திட்டத்தை 22.07.2024 ஜூலை 22ம்தேதி முதல்வர் தொடங்கி வைத்து, பயனாளிகளுக்கு கட்டுமான அனுமதி ஆணைகளை வழங்கினார்.

இந்த திட்டத்தின் வாயிலாக 2500 சதுர அடி கொண்ட மனையிடத்தில் 3500 சதுர அடி கட்டட பரப்பு வரை தரைதளம் மற்றும் முதல்தளம் 7 மீட்டர் உயரம் வரை கொண்ட குடியிருப்பு கட்டடங்களுக்கு எந்த அரசு அலுவலகங்களுக்கும் செல்லாமல் மக்கள் வீட்டிலிருந்தபடியே சுய சான்றிதழ் முறையில் அனுமதி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது, இத்திட்டத்தின் சிறப்பம்சமாகும். இத்திட்டத்தின்கீழ் கட்டப்படும் குடியிருப்பு கட்டடங்களுக்கு கட்டட முடிவு சான்று பெறுவதிலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இத்திட்டம் தொடங்கப்பட்ட ஆகஸ்ட் 2024 முதல் இதுநாள் வரை 1,01,925 விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கபட்டுள்ளன. இதில் கிராம ஊராட்சிகளிலிருந்து 68,748 விண்ணப்பங்களும், நகராட்சிகளிலிருந்து 23,488 விண்ணப்பங்களும், பேரூராட்சிகளிலிருந்து 8,150 விண்ணப்பங்களும், சென்னை மாநகராட்சியிலிருந்து 1,539 விண்ணப்பங்களும் பெறப்பட்டு, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும், இத்திட்டம் தொடங்கப்படுவதற்கு முந்தைய 10 மாதங்களில் அதாவது அக்டோபர் 2023 முதல் ஜூலை 2024 வரை 59,715 விண்ணப்பங்களுக்கு மட்டுமே ஒப்புதல் பெறப்பட்டன. இந்த எண்ணிக்கை அதிகரிப்புகளின் மூலம் திட்ட அனுமதி பெறுபவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்துள்ளது. இதன்மூலம் அனுமதியற்ற கட்டுமானங்களின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது. இந்த நிகழ்சியில், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் காகர்லா உஷா, நகர் ஊரமைப்பு இயக்குநர் பா.கணேசன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

The post நகர் ஊரமைப்பு இயக்ககத்தின் சுயசான்றிதழ் திட்டத்தின் கீழ் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்: கட்டிட அனுமதிக்கான ஆணைகளை பெற்ற பயனாளிகள் முதல்வருக்கு நன்றி appeared first on Dinakaran.

Related Stories: