தனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய கோரி நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனக்கு எதிரான தேர்தல் வழக்கு நிராகரிக்க கோரி அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம், நத்தம் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலத்தை விட 11 ஆயிரத்து 932 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அவரது வெற்றியை எதிர்த்து திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அதிமுக எம்எல்ஏ நத்தம் விஸ்வநாதன், தனது வேட்புமனுவில் பல தகவல்களை மறைத்துள்ளார்.

வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்து ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டார். வாக்குப் பதிவுக்கு முன் கடைசி 48 மணி நேரம், தேர்தல் நடத்தை விதிகளை மீறி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். தேர்தல் ஆணையம் நிர்ணயித்த உச்சவரம்புக்கு அதிகமாக தேர்தல் செலவு செய்துள்ளார் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார். அப்போது, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை தொடர்ந்து விசாரிக்க எந்த காரணங்களும் இல்லை. எனவே, திமுக வேட்பாளர் ஆண்டி அம்பலம் தாக்கல் செய்த தேர்தல் வழக்கை நிராகரிக்க வேண்டும் என்று நத்தம் விஸ்வநாதன் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, தேர்தல் வழக்கை விசாரிக்க போதுமான காரணங்கள் உள்ளதால், தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி நத்தம் விஸ்வநாதன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

The post தனக்கு எதிரான தேர்தல் வழக்கை ரத்து செய்ய கோரி நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ தாக்கல் செய்த மனு தள்ளுபடி: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: