கட்சி நிர்வாகிகளுடனான ‘ஒன் டூ ஒன் உடன்பிறப்பே வா’ நிகழ்ச்சியின்போது, தேவையான இடங்களில் தயவு தாட்சண்யமின்றி பதவியை பறிப்பேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இந்நிலையில், மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் அனைவரும் ராஜினாமா செய்யவேண்டும் என முதலமைச்சர் நேற்றிரவு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மதுரை மாநகராட்சி பணிகளில் தலையீடு புகாரில், மேயர் இந்திராணியின் கணவர் பொன்வசந்த் கடந்த மே மாதம் கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். தற்போது மண்டல தலைவர்கள் கூண்டோடு ராஜினாமாவிற்கு உத்தரவிட்டிருப்பது கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சுமார் 150 கட்டிடங்களுக்கு, சொத்து வரி குறைக்கப்பட்டு, 2022, 2023ம் ஆண்டுகளில் ரூ.150 கோடி வரி வருவாய் இழப்பு மாநகராட்சிக்கு ஏற்பட்டிருந்ததும் தெரிந்தது. இதுகுறித்த புகாரில் மத்திய குற்றப்பிரிவு போலீசார், சைபர் கிரைம் போலீசாருடன் இணைந்து தொடர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். புதிதாக கட்டப்படும் கட்டிடங்களுக்கு வரியை குறைக்க நீதிமன்றம் உத்தரவு வேண்டும். அல்லது மாநகராட்சி கூட்டத்தின் தீர்மானம் வேண்டும். ஆனால் இவ்விரு நடைமுறைகளும் இன்றி மண்டலங்களில் ஆயிரக்கணக்கான கட்டிடங்களுக்கு குறைவான சொத்து வரி நிர்ணயம் செய்யப்பட்டிருப்பது தெரிந்தது. தற்போது இவ்வழக்கில் விசாரணை வேகப்படுத்தப்பட்டது.
மத்திய குற்றப்பிரிவு போலீஸ் உதவி கமிஷனர் வினோதினி தலைமையிலான விசாரணையில் ஓய்வுபெற்ற உதவி கமிஷனர், உதவி வருவாய் அலுவலர் உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், உதவியாளர் தனசேகரன், புரோக்கர்கள் சாகா உசேன், ராஜேஷ் ஆகியோரை போலீஸ் மூன்று நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகிறது. மாநகராட்சி அதிகாரிகள், அலுவலர்களுடன் மாநகராட்சி மண்டலத் தலைவர்களிடமும் போலீசார் விசாரணை நடத்தினர். இத்துடன் மாநகராட்சி அலுவலகத்தில் கைப்பற்றப்பட்ட கம்ப்யூட்டர்களில் பதிவான தகவல்களை கொண்டும் விசாரணை நடத்தப்பட்டது.
மாநகராட்சி மண்டலத் தலைவர்களிடம், இவர்களது மனைவி, கணவரிடமும் மத்திய குற்றப்பிரிவினர் விசாரணை நடத்தினர். ஒவ்வொருவரிடமும் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக விசாரித்து, நூற்றுக்கணக்கான கேள்விகள் கேட்கப்பட்டன. இதற்கிடையில், மாநாகராட்சி பிரச்னையை மேலும் அரசியலாக்கும் வகையில் மதுரை மாநகராட்சியை கண்டித்து அதிமுக இன்று ஆர்ப்பாட்டம் அறிவித்திருந்தது. விசாரணை நடந்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடியாக மதுரை மாநகராட்சியின் 5 மண்டலத்தலைவர்களையும் கூண்டோடு ராஜினாமா அறிவிப்பை வெளியிட்டு, தயவு தாட்சண்யமின்றி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்.
The post கட்டிடங்களுக்கு சொத்துவரி நிர்ணயம் செய்ததில் முறைகேடு சர்ச்சை மதுரை மாநகராட்சி மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா: முதல்வர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு appeared first on Dinakaran.
