இந்த அமைப்பு கடந்த ஆண்டு சர்வதேச வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு பதிலாக புதிய கரன்சியை உருவாக்க திட்டமிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிபர் டிரம்ப், பொது கரன்சியை உருவாக்க திட்டமிட்டால், பிரிக்ஸ் நாடுகளுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என எச்சரித்தார். இந்த நிலையில், பிரிக்ஸ் அமைப்பின் 17வது உச்சி மாநாடு பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நேற்று முன்தினம் தொடங்கியது. உலக நாடுகளுக்கு எதிராக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூடுதல் வரி விதித்து மிரட்டிக் கொண்டிருக்கும் சூழலில், பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு நடப்பது உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில், டிரம்பின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, கூட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனாலும், சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் மாநாட்டை புறக்கணித்த நிலையில், பிரதமர் மோடி உள்ளிட்ட 10 உறுப்பு நாடுகளின் தலைவர்கள் 2 நாள் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டின் முதல் நாள் நிறைவாக நேற்று முன்தினம் கூட்டு தீர்மானம் வெளியிடப்பட்டது. இதில், உலக நாடுகள் மீது அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி என்ற பெயரில் கூடுதல் வரி விதித்ததற்கு மறைமுகமாக கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
ஆனாலும், ஈரான் மீதான தாக்குதல் விவகாரத்திலும் கூட அமெரிக்காவையோ, இஸ்ரேலையோ பிரிக்ஸ் அமைப்பு நேரடியாக குற்றம்சாட்டிவில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டதற்கு கண்டனம் மட்டும் தெரிவித்தது. இதே போல, 31 பக்க தீர்மானத்தில் ஒரே ஒரு இடத்தில் மட்டுமே உக்ரைன் குறித்து குறிப்பிடப்பட்டது. அதே சமயம், ரஷ்யாவின் ரயில்வே கட்டமைப்பை குறிவைத்து சமீபத்தில் நடத்திய தாக்குதலுக்காக உக்ரைனுக்கு பிரிக்ஸ் அமைப்பு கடுமையான கண்டனம் தெரிவித்தது. மேலும் காசாவில் மனிதாபிமான நிலை குறித்து கடும் கவலை தெரிவிக்கப்பட்டதோடு, அனைத்து பணயக் கைதிகள் விடுவிக்கப்பட வேண்டும் என்றும் பேச்சுவார்த்தையை தொடர்ந்து இரு நாடுகள் தீர்வுக்கான உறுதிப்பாட்டை மீண்டும் உறுதி செய்ய பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டது.
* பஹல்காம் தாக்குதலுக்கு பிரிக்ஸ் கடும் கண்டனம்
மாநாட்டில் சர்வதேச அமைதி, பாதுகாப்பு, சீர்த்திருத்தம், நிர்வாகம் குறித்த சிறப்பு கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘‘தீவிரவாதத்திற்கு எதிராக உலக நாடுகள் ஒன்றிணைய வேண்டும். சமீபத்தில் காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல், மனித குலத்தின் மீதான தாக்குதலாகும். இந்தியா தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு, அதே சமயம் தீவிரவாதத்தை ஆதரிக்கும் நாடு பாகிஸ்தான். எனவே பாதிக்கப்பட்டவர்களையும் ஆதரவாளர்களையும் ஒரே தராசில் எடைபோடக் கூடாது’’ என்றார். இதைத் தொடர்ந்து பிரிக்ஸ் மாநாட்டின் கூட்டு தீர்மானத்தில் பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டதோடு, எல்லை தாண்டிய தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து வடிவத்திலும் தீவிரவாதத்தை எதிர்ப்பதில் உறுதிபூண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
* மோதலுக்கான கூட்டணி அல்ல
அமெரிக்க அதிபர் டிரம்பின் மிரட்டல் குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் நேற்று அளித்த பேட்டியில், ‘‘வளரும் மற்றும் வளர்ந்து வரும் நாடுகள் இடையேயான ஒத்துழைப்புக்கு பிரிக்ஸ் முக்கிய தளமாகும். இது மோதலுக்கான கூட்டணி அல்ல. எந்த ஒரு நாட்டையும் குறிவைக்கவில்லை. வர்த்தகமும் வரிகளும் எந்த வெற்றியாளர்களையும் கொண்டிருப்பதில்லை. வெளிநாட்டு பொருட்களை தவிர்த்து உள்நாட்டு பொருட்களை ஊக்குவிப்பதற்கான சரியான பாதையும் அது அல்ல’’ என்றார்.
* கியூபா, மலேசியா தலைவர்களுடன் மோடி சந்திப்பு
பிரிக்ஸ் மாநாட்டின் இடையே கியூபா அதிபர் மிகுயல் டியாஸ் கனெல் பெர்முடசை பிரதமர் மோடி நேற்று சந்தித்து பேசினார். அப்போது ஆயுர்வேதம், யுபிஐ பரிவர்த்தனை தொழில்நுட்பம், பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில் ஒத்துழைப்பு குறித்து ஆலோசனை நடத்தினார். மேலும், மலேசிய பிரதமர் அன்வர் பின் இப்ராகிமையும் பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்ததற்காக இப்ராகிமுக்கு மோடி நன்றி தெரிவித்தார்.
The post அமெரிக்க எதிர்ப்பு கொள்கையை பின்பற்றும் பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி: அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு புதிய சிக்கல் appeared first on Dinakaran.
