மதுரை: வக்ப் சட்டத்தை திரும்பப் பெற வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் மதுரையில் நேற்று நடந்த மனிதநேய மக்கள் கட்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது. மனிதநேய மக்கள் கட்சியின் எழுச்சிப் பேரணி மாநாடு மதுரை, வண்டியூர் டோல்கேட் பகுதியில் மதுரை முஹம்மது கவுஸ் திடலில் நேற்று மாலை நடந்தது. மனிதநேய மக்கள் கட்சித்தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ தலைமை வகித்தார். தமிழ் மையம் நிறுவனர் ஜெகத் கஸ்பர் ராஜ், ஜோதிமலை இறைபணி திருக்கூடம் நிறுவனர் திருவடிக்குடில் சுவாமிகள், மனிதநேய மக்கள் கட்சி பொதுச்செயலாளர் ப.அப்துல் சமது எம்எல்ஏ, மக்கள் விடுதலை கட்சி நிறுவனத் தலைவர் முருகவேல்ராஜன் உள்ளிட்ட ஏராளமானோர் பேசினர். முன்னதாக மாலை 3 மணிக்கு மதுரை பாண்டிகோவில் சந்திப்பு துவங்கி மாநாடு திடல் வரை பிரமாண்ட பேரணி நடந்தது.
சீருடை அணிந்து டிரம்ஸ் இசை முழங்க ராணுவ அணிவகுப்பு போல் தொண்டர் படையினர் அணிவகுத்து பேரணியாக சென்றனர். கட்சித்தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா எம்எல்ஏ பேரணியை தொடங்கி வைத்தார். இம்மாநாட்டில், ‘முஸ்லிம்களுக்கான அரசியல் பிரதிநிதித்துவம் மறுக்கப்படுகிறது. மக்களவையில் 80க்கு பதிலாக 24 முஸ்லிம்கள், நாட்டின் 4,123 சட்டமன்ற உறுப்பினர்களில் வெறும் 296 பேர் மட்டுமே முஸ்லிம்கள். மாநகராட்சி, நகராட்சி ஊராட்சி அமைப்புகளில் இதைவிட மோசமான நிலை இருக்கிறது. போதிய பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும்; வக்ப் திருத்தச் சட்டத்தை உடனே திரும்பப் பெறவேண்டும்; தனியார் துறைகளிலும் சமூகநீதியை நிலைநாட்டும் வகையில் இட ஒதுக்கீடு உள்ளிட்டவை நடைமுறைப்படுத்த தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வேண்டும்;
ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு முறை கைவிடப்பட வேண்டும்; தேசிய கல்விக் கொள்கை பெயரில் பாசிச கல்விக் கொள்கையை பலவந்தமாக புகுத்த முயலும் ஒன்றிய பாஜ அரசை உறுதியோடு எதிர்த்து நிற்கும் திராவிட மாடல் திமுக அரசுக்கு இம்மாநாடு மனமார்ந்த பாராட்டுகளை தெரிவிக்கிறது. தவறான தகவல்களை கொண்ட தமிழகத்தில் முகமதியர் ஆட்சி தலைப்பிலான பாடம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு துவக்கத்தில் முப்தி முகம்மது யூசுப் இறைமறை ஓத, கட்சி மாநில பொருளாளர் கோவை உமர் வரவேற்றார். முடிவில் மாநில அமைப்பு செயலாளர் காதர் மைதீன் நன்றி கூறினார்.
அரசியல் அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவம்
மாநாட்டில் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா பேசியதாவது: அர்த்த ராத்திரியில் நாடாளுமன்ற இரண்டு அவைகளில் வக்பு திருத்த சட்டம் கொண்டு வரப்பட்டது. விவசாயிகளின் 3 வேளாண் சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மோடி சரணடைந்தார். அதைப்போலவே வக்பு திருத்தச் சட்டத்தை குப்பையில் தூக்கி எறியும் வரை போராட்டம் தொடரும். இந்த தீர்மானத்தை அனைவரும் பட்டி தொட்டியெல்லாம் எடுத்துரைக்க வேண்டும். அனைத்து கட்சிகளிலும் முஸ்லிம்கள் இருக்கின்றனர். அத்தனை அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து, முஸ்லிம்களுக்கு அரசியல் அமைப்புகளில் உரிய பிரதிநிதித்துவத்தை தர வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மதுரையில் மனிதநேய மக்கள் கட்சி மாநாடு; வக்ப் சட்டத்தை திரும்ப பெற வேண்டும்: ஒன்றிய அரசை வலியுறுத்தி தீர்மானம் appeared first on Dinakaran.
