தொடர்ந்து காலை சுவாமி சண்முகருக்கு பத்தாம் கால யாக சாலை பூஜைகளும், மாலை பதினொன்றாம் கால யாக சாலை பூஜைகளும் நடந்தது. யாக சாலை வழிபாட்டில், வேத பாராயணம், திருமுறை விண்ணப்பம் மற்றும் நாதசுர இன்னிசையும், பெண் ஓதுவார்கள் உட்பட 108 ஓதுவார் மூர்த்திகளைக் கொண்டு பக்க வாத்தியங்களுடன் பன்னிரு திருமுறைகள், திருப்புகழ் மற்றும் கந்தர் அனுபூதி முதலான செந்தமிழ் வேதங்கள் முற்றோதுதல் நடைபெற்றது.
சிகர நிகழ்ச்சியாக இன்று (7ம்தேதி) காலை 6.24 மணிக்கு குடமுழுக்கு தமிழில் நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராஜகோபுரம் அருகே சுவாமி சண்முகர் யாகசாலையில் இன்று அதிகாலை 12ம் கால யாகசாலை பூஜைகளில் மகா நிறைஅவி வழிபாடு, பேரொளி வழிபாடு, யாத்ரா தானம், கடம் மூலாலய பிரவேசமாகி காலை 6.15 மணிக்கு மூலவர், சுவாமி சண்முகர், ஜெயந்திநாதர், நடராஜர், குமரவிடங்க பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும், ராஜகோபுரத்திற்கும் விமான திருக்குட நன்னீராட்டு நடைபெற்றது. இதனை தொடர்ந்து எண் வகை மருந்து சாத்துதல், எழுந்திருப்பு, தமிழ் வேதம் ஓதுதல், நான்கு வேதம் ஓதுதல் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு சுவாமி சண்முகர், உருகு சட்ட சேவையாகி சண்முக விலாச மண்டபம் சேர்கிறார். அங்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் ஆகி தீபாரகைக்கு பின் இரவு 7 மணிக்கு சுவாமி சண்முகர், சுவாமி ஜெயந்திநாதர், சுவாமி குமரவிடங்கப்பெருமான் மற்றும் பரிவார மூர்த்திகள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.
கும்பாபிஷேக விழாவை காண திருச்செந்தூருக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் நேற்று அதிகாலை முதலே வந்து குவியத் தொடங்கினர். இன்று நடைபெறும் கும்பாபிஷேக விழாவில் 10 லட்சம் பக்தர்கள் பங்கேற்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கடற்கரையில் இருந்து தான் ராஜகோபுரத்தில் நடைபெறும் கும்பாபிஷேக விழாவை பக்தர்கள் காண முடியும். இதற்காக கடற்கரையில் 20 பாக்ஸ் அமைக்கப்பட்டு 50 ஆயிரம் பேர் பார்க்க வசதி செய்யப்பட்டுள்ளது. விழாவை காண 65 இடங்களில் எல்இடிவிக்கள் வைக்கப்பட்டுள்ளது. டிரோன்கள் மூலம் பக்தர்களுக்கு தீர்த்தம் தெளிக்கப்படுகிறது. பக்தர்கள் வசதிக்காக மருத்துவம், குடிநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழாவில் 6 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கோயில் வளாகம், நகர்ப்பகுதியில் என ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. கடற்கரையில் 3 ரோந்து படகுகளும், மீனவர்கள் படகுகள் மற்றும் கடலோர காவல் படை மற்றும் தமிழக பேரிடர் மீட்புக்குழுவினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கும்பாபிஷேகம் முடிந்த பிறகு கூட்ட நெரிசலின்றி பக்தர்கள் வெளியே செல்வதற்கும் வசதி செய்யப்பட்டுள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்தது.
The post 15 ஆண்டுகளுக்கு பின் தமிழில் மந்திரங்கள் முழங்க திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மகா குடமுழுக்கு நடைபெற்றது appeared first on Dinakaran.
