பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்(90) உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் வட்டத்தில் உள்ள ஆண்டநாயகபுரத்தில் 1935-ம் ஆண்டு பிறந்தவர் வா.மு.சேதுராமன். 1988-ம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றார்.
பின்னர் திருவல்லிக்கேணி முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றினார். தமிழ்ப்பணி என்ற பெயரில் சிறு பத்திரிக்கையை தொடங்கி தனது இறுதிகாலம் வரை நடத்திவைந்தார். நெஞ்சத்தோட்டம், தமிழ் முழக்கம், தாய் மண், காலக்கணி, சேது காப்பியம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நூல்களையும், ஒரு லட்சத்திற்க்கும் மேற்பட்ட கவிதைகளையும் எழுதியுள்ளார்.
இவரது தமிழ்த் தொண்டினை பாராட்டி தமிழ்நாடு அரசு 1990-ம் ஆண்டு கலைமாமணி விருதினையும், 2001-ம் ஆண்டு திருவள்ளுவர் விருதினையும் வழங்கி கௌரவித்தது. முன்னாள் முதலமைச்சர் கலைஞர், பேராசிரியர் அன்பழகன், முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரிடம் நட்பு பாராட்டியவர். கடந்த மே மாதம் கலைஞர் காவியம் என்ற கவிதை நூலை கடைசியாக வெளியிட்டிருந்தார். வ.மு.சேதுராமன் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் தமிழுக்காகவே தன்னை ஒப்படைத்தவர் என கலைஞரால் பாரட்டப்பட்டதை நினைவு கூர்ந்துள்ளார்.
The post பன்னாட்டு தமிழுறவு மன்ற நிறுவனர் பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன் உடலுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி appeared first on Dinakaran.
