ஓட்டுநர் தவறால் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கடந்த 2014ம் ஆண்டு ஜூன் 18ம் தேதி கர்நாடகாவில், என்.எஸ்.ரவிஷா என்ற ஒப்பந்ததாரர் கார் விபத்தில் உயிரிழந்தார். அவர் மாதம் ரூ.3 லட்சம் வருமானம் ஈட்டியதால், தங்களுக்கு ரூ.80 லட்சம் வரையில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். குறிப்பாக அப்போது காரின் டயர் வெடித்ததாலேயே விபத்து நடந்ததாக அவர்கள் தரப்பில் வாதிடப்பட்டது.

ஆனால், இந்த விபத்து குறித்து காவல்துறை விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையில் முற்றிலும் மாறுபட்ட தகவலைத் தெரிவித்தது. அதாவது போக்குவரத்து விதிகளை மீறியும், அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் ரவிஷா காரை ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்றும், கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தலைகீழாகக் கவிழ்ந்ததாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதையடுத்து காவல்துறை தாக்கல் செய்திருந்த அறிக்கையின் அடிப்படையில் ரவிஷாவின் வழக்கை தள்ளுபடி செய்து மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து இதே உத்தரவையே கர்நாடகா உயர்நீதிமன்றமும் மீண்டும் உறுதி செய்திருந்தது. இதையடுத்து மேற்கண்ட உத்தரவுகளுக்கு எதிராக தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு வழக்கை விரிவாக விசாரணை நடத்திய உச்ச நீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருந்தது.

மேற்கண்ட வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா வழங்கிய தீர்ப்பில்,‘‘இந்த விவகாரம் தொடர்பாக நாங்கள் எந்தவித புதிய உத்தரவையும் பிறப்பிக்க விரும்பவில்லை. எனவே முன்னதாக மோட்டார் வாகன விபத்து தீர்ப்பாயம் மற்றும் கர்நாடகா உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு உறுதி செய்யப்படுகிறது. மேலும் ஓட்டுநரின் தவறினால் ஏற்பட்ட இந்த விபத்தில், வேறு எந்த காரணமும் இருப்பதாகத் தெரியவில்லை என்று தெரிவித்து வழக்கை தள்ளுபடி செய்து முடித்து வைத்தார்.

இந்த தீர்ப்பால் ஓட்டுநர் ஒருவர் தனது சொந்த தவறால், அதாவது குற்றமாகக் கருதப்படும் வகையில் அஜாக்கிரதையாகவும், அதிவேகமாகவும் வாகனத்தை ஓட்டி விபத்தில் உயிரிழந்தால், அவரது குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்க காப்பீட்டு நிறுவனங்களுக்கு எந்தக் கடமையும் இல்லை என்று திட்டவட்டமாகத் தெரியவருவது மட்டுமில்லாமல், அதிவேகமாக வாகனத்தை ஓட்டுவது, அபாயகரமான சாகசங்களில் ஈடுபடுவது போன்றவற்றால் ஏற்படும் மரணங்களுக்கு இழப்பீடு கோர முடியாது என்றும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரின் தவறுக்கு, அவரது குடும்பத்தினர் காப்பீடு தொகை கேட்க தகுதியில்லை என்பது உறுதியாகியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

The post ஓட்டுநர் தவறால் விபத்து ஏற்பட்டால் காப்பீடு தொகை கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Related Stories: