இளைஞர் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு குற்றத்தை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தவெகவினருக்கு ஐகோர்ட் அறிவுரை

சென்னை: சிவகங்கை மாவட்டம், திருபுவனத்தில், திருட்டு வழக்கில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமார், காவலர்கள் தாக்கியதில் மரணமடைந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, சென்னை சிவானந்தா சாலையில் ஜூலை 6ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி வழங்க காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி த.வெ.க. சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இதையடுத்து, இந்த வழக்கை பிற்பகல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கோரி த.வெ.க தரப்பில் நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நேற்று முறையிடப்பட்டது. இந்த முறையீட்டைக் கேட்ட நீதிபதி, பிற்பகல் விசாரிக்க என்ன அவசரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அதற்கு, தமிழகத்தில் இந்த ஆட்சியில் இதுவரை 23 விசாரணை மரணங்கள் நடந்துள்ளது.

அதை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதைக்கேட்ட நீதிபதி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுப்பதற்கு பதில், மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள் எனத் தெரிவித்த நீதிபதி, ஆர்ப்பாட்டத்தை தள்ளிவைக்கும்படி அறிவுறுத்தினார். இதை தொடர்ந்து பிற்பகலில் தவெகா வழக்கறிஞர் ஆஜராகி, மனு எண்ணிடப்பட்டுள்ளது வழக்கை விசாரணைக்கு எடுக்க வேண்டும் என்று முறையிட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறைக்கு நிறைய வேலைகள் உள்ளது. உங்களுக்கு ஏன் அவசரம்? உங்களுக்கான வேலையை மட்டும் தான் காவல்துறை பார்க்க வேண்டுமா? காவல்துறைக்கு அழுத்தம் தரவேண்டாம், அனுமதி கேட்டு குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்பாக கடிதம் தர வேண்டும். கூட்டம் நடத்துங்கள் வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் காவல்துறைக்கு கால அவகாசம் தாருங்கள். காவல்துறைக்கு மீண்டும் மனு அளிக்க வேண்டும். காவல்துறை அந்த மனுவை பரிசீலித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

The post இளைஞர் கொலை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கோரி மனு குற்றத்தை தடுக்க மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்: தவெகவினருக்கு ஐகோர்ட் அறிவுரை appeared first on Dinakaran.

Related Stories: