சிவகங்கை : திருப்புவனம் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகேயுள்ள மடப்புரத்தில் கோயில் காவலாளியாகப் பணியாற்றி வந்தவர் அஜித்குமார். சாமி கும்பிட வந்த நிகிதா என்ற பெண்ணின் காரில் இருந்த நகை மற்றும் பணம் காணாமல் போனது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இவர், காவல்துறையால் கடுமையாகத் தாக்கப்பட்டு பரிதாபமாக பலியானார். இந்த நிலையில், திண்டுக்கல்லில் கல்லூரிப் பேராசிரியராக பணியாற்றி வரும் நிகிதா தீவிர பாஜக ஆதரவாளராக செயல்பட்டு வந்தது அம்பலமாகி உள்ளது.
ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பாஜகவுக்கு ஆதரவாக தொடர்ந்து பதிவுகள் வெளியிட்டு வந்துள்ளார். பாஜக ஆதரவு மட்டுமின்றி திமுக, திராவிட இயக்கங்கள் மீது வெறுப்பு கருத்துகளை நிகிதா பதிவிட்டுள்ளார். பாஜக அண்ணாமலையின் தீவிர ஆதரவாளராக, அவரைப் பாராட்டி பல்வேறு பதிவுகள் வெளியிட்டுள்ளார். பாஜக பின்புலத்தை பயன்படுத்தி பல்வேறு மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக புகார்கள் வெளிவந்துள்ளன. பேராசிரியர், அங்கன்வாடி ஊழியர், ஆசிரியர் என அரசு வேலை வாங்கித் தருவதாக மோசடி, திருமண மோசடி என இவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. 6 மோசடி வழக்குகளில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்தவர் நிகிதா.
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கில் நிகிதா இன்று விசாரணைக்கு ஆஜராவார் என தகவல் வெளியானது. அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக நிகிதா இதுவரை விசாரணைக்கு ஆஜராகவில்லை. ஆனால், அஜித்குமார் மரண வழக்கில் சட்டப்படி முழு ஒத்துழைப்பு தர தயார் என நிகிதா ஆடியோ வெளியிட்டுள்ளார். அஜித்குமார் மரணம் பெரும் வருத்தமளிப்பதாகவும், தனக்கு எந்த அதிகாரியையும் தெரியாது எனவும் நிகிதா விளக்கம் அளித்துள்ளார்.
The post திருப்புவனம் போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட அஜித்குமார் மீது புகாரளித்த நிகிதா குறித்து வெளியான திடுக்கிடும் தகவல்கள்!! appeared first on Dinakaran.
