வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டது ஒன்றிய அரசு!!

டெல்லி : வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டது. ஒன்றிய அரசு சமீபத்தில் வக்பு சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்து நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றியது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் உள்ள வக்பு சொத்துகளைப் பதிவு செய்வதற்கான ‘உமீத்’ என்ற பெயரில் புதிய இணையதளம் அறிமுகம் செய்யப்பட்டது. மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்த இணையதளத்தை அறிமுகம் செய்து பயன்பாட்டுக்குக் கொண்டு வந்தார். இது வக்பு வாரிய சொத்துகள் பதிவு மற்றும் எண்மமயமாக்கலை உறுதிப்படுத்தும் என்பதோடு, நிர்வாகம் மற்றும் பயன்பாட்டிலும் வெளிப்படைத்தன்மையை விரிவுபடுத்தும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வக்பு வாரிய சொத்துகளை இணையதளம் மூலம் பதிவு செய்வதற்கான 5 விதமான பார்ம் உள்ளிட்ட 17 பக்க விதிமுறைகளை ஒன்றிய அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. வக்ஃப் சொத்துக்களை எப்படி பதிவு செய்வது, பதிவு செய்யும் போது வழங்க வேண்டிய ஆவணங்கள், அந்த சொத்துக்கள் எதற்காக பயன்படுத்தப்படுகிறது, சொத்துக்களை சரிபார்ப்பது உள்ளிட்ட நடைமுறை விதிகள் அரசாணையில் வெளியீடு செய்யப்பட்டுள்ளன. மேலும் ஒன்றிய அரசின் சிறுபான்மையினர் நல அமைச்சகத்தின் இணைச் செயலாளர் கட்டுப்பாட்டின்கீழ் வலைப்பக்கம் இருக்கும் என்றும் ஒவ்வொரு மாநில அரசும் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு குறையாத அதிகாரியை வலைப்பக்க நிர்வாகியாக நியமிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உமீத் வலைப்பக்கத்தில் பதிவுசெய்யப்படும் வக்ஃபு சொத்துகளுக்கு தனி அடையாள எண் தானியங்கி முறையில் வழங்கிப்படும். முத்தவல்லிகள் ஒவ்வொருவரும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள வலைப்பக்கத்தில் செல்போன் எண், இமெயில் தந்து பதிய வேண்டும். பதிவுசெய்துள்ள முத்தவல்லிகள் வலைப்பக்கத்தில் உள்ள சொத்து விவரங்களை அறிந்துகொள்ள முடியும். ஏதாவது ஒரு சொத்தை தவறாக வக்ஃபு சொத்து என பதிவுசெய்தால் அப்பிரச்சனையை ஓராண்டில் விசாரித்து தீர்வு காணப்படும். வலைப்பக்கத்தில் சொத்துகளை பதிவுசெய்து மாநில அரசு பட்டியல் ஒன்றை வெளியிட வேண்டும். மாநில அரசு வெளியிடும் பட்டியலில் வக்பு சொத்து தொடர்பான அனைத்து விவரங்களும் இடம்பெற வேண்டும். கணவனை இழந்தோர், விவாகரத்து செய்தோர், பெற்றோரை இழந்த குழந்தைக்கு பராமரிப்பு நிதி குறித்தும் இடம்பெற வேண்டும்.

The post வக்பு வாரிய சொத்துகளை பதிவு செய்வதற்கான விதிமுறைகளை அரசிதழில் வெளியிட்டது ஒன்றிய அரசு!! appeared first on Dinakaran.

Related Stories: