சென்னை: தமிழ்நாடு முழுவதும் ‘ஓரணியில் தமிழ்நாடு’ பரப்புரையை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் வீடு,வீடாக சென்று மக்களை சந்தித்து பேசினார். அரசின் செயல்பாடு, மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறினார். அமைச்சர்கள், எம்பி, எம்எல்ஏக்கள், திமுக முன்னோடிகள் வீடு,வீடாக சென்று மக்களை சந்தித்து 4 ஆண்டு அரசின் சாதனைகளை எடுத்து கூறி வருகின்றனர்.
தமிழ்நாட்டு மக்களை அநீதிகளுக்கு எதிராக ஒன்றிணைக்கும் ஒப்புயர்விலா செயல் திட்டத்தின் கீழ் நம் மண் மொழி மானம் காக்க, “ஓரணியில் தமிழ்நாடு” எனும் மாபெரும் முன்னெடுப்பை திமுக தொடங்கியுள்ளது. இந்த ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பை திமுக தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கி வைத்தார். தொடர்ந்து, ஓரணியில் தமிழ்நாடு குறித்து விளக்கி பேசினார். அடுத்து 38 மாவட்டங்களிலும் பொறுப்பு அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் செய்தியாளர் சந்திப்பை நடத்தி ஓரணியில் தமிழ்நாடு குறித்து விளக்கினர். தொடர்ந்து, நேற்று முன்தினம் திமுகவில் உள்ள 76 மாவட்டங்களிலும் ஓரணியில் தமிழ்நாடு பொதுக்கூட்டங்கள் நடந்தது. இதில் திமுகவின் முன்னணி தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், ஜூலை 3ம் தேதி முதல் திமுகவினர் தமிழகம் முழுவதும் அனைத்து வாக்குச்சாவடி பகுதிகளிலும் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து பரப்புரை மேற்கொள்வார்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். அதன்படி, நேற்று காலை சென்னை ஆழ்வார்ப்பேட்டை பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வீடு,வீடாகச் சென்று பொதுமக்களை சந்தித்து ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து எடுத்துரைத்தார். அரசின் செயல்பாடு, மக்கள் நலத்திட்டங்களையும் எடுத்து கூறினார். ஓரணியில் தமிழ்நாடு இயக்கம் குறித்து பொதுமக்களிடம் சில கேள்விகள் அடங்கிய படிவங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
அப்போது ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் முக்கியத்துவத்தை மக்கள் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை கண்கூடாகக் கண்டு மகிழ்ந்தார். எந்த நெருக்கடியான சூழலிலும் தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காப்பாற்றப்பட வேண்டுமென்று நினைக்கிறீர்களா? என்று பொதுமக்களிடம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒரு கேள்வியை முன்வைத்தார். அப்பொழுது “தமிழ்நாடும் தமிழ்மொழியும் வளமாக இருந்தால்தானே நாம் நலமாக வாழ முடியும். எனவே, தமிழ்நாடும், மொழியும், நமது சுயமரியாதையும் காப்பாற்றப்பட வேண்டியது மிக, மிக முக்கியம் என்று அவர்கள் பதிலளித்தனர். அதை கேட்டதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மிகுந்த மகிழ்ச்சியோடு “அதற்காகத்தான் திமுகவும், இந்த அரசும் பாடுபடுகிறது” என்று தெரிவித்தார்.
அடுத்த வீட்டிற்குச் சென்றபோது முதல்வரை எதிர்கொண்டு, மகிழ்ச்சியோடு வாங்க, வாங்க என்று அகமும் முகமும் மலர வரவேற்றவர்களை நோக்கி “ஓரணியில் தமிழ்நாடு” படிவத்தை அளித்து, மகளிர் தங்கள் உரிமைத் தொகை பெற்றிடவும், விவசாயிகள், மீனவர்கள், நெசவாளர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரின் நலன்களைக் காத்திடும் நலத்திட்டங்களை நாம் தொடர்ந்து பெற்றிடவும் வேண்டுமா, இல்லையா என்று ஒரு கேள்வியை முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்தார்.
அப்போது அங்கே இருந்தவர்கள் “ஆமாம், ஆமாம்.. இந்த மகளிர் உரிமைத் தொகை எங்களின் தன்மானத்தைப் பாதுகாக்கிறது” என்று உரத்த குரலில் எழுச்சியுடன் கூறினர். இதை கேட்டு முதல்வர் மகிழ்ச்சியடைந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு வேர்களாக திகழும் விவசாயிகளையும், நெசவாளர்களையும், மீனவர்களையும் மற்றும் பல்வேறு தரப்பினரையும் ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்தி பாதுகாக்க வேண்டியது இந்த அரசின் கடமை என்பதை நாங்கள் ஒவ்வொருவரும் உணர்கிறோம் என்றும் அவர்கள் கூறியதைக் கேட்டு முதல்வர் மட்டுமல்லாமல், உடனிருந்தவர்களும் பெரிதும் வியந்தனர். அதே தெருவில் உள்ள அடுத்தடுத்த வீடுகளுக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்றார்.
முதல்வர் தங்கள் வீடு தேடி வந்துள்ளார் என்பதை அறிந்து ஒவ்வொரு வீடுகளிலும் இருந்தவர்கள் அத்தனை பேருடைய முகத்திலும் மகிழ்ச்சிக் கலை பொங்கி எழுந்தது. மகிழ்ச்சி கடலில் மூழ்கிய அந்த மக்களிடம் முதல்வர், ‘‘மாணவர்களுக்கான கல்வி நிதி, மாநில வளர்ச்சிக்காக வழங்கப்பட வேண்டிய நிதிப்பகிர்வு, நியாயமற்ற தொகுதி மறுவரையறை, கொடுமையான நீட் போன்ற நுழைவு தேர்வுகள் முதலியவைகளிலிருந்து நம் இளைஞர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட வேண்டுமா, வேண்டாமா ?’’ என்று ஒரு கேள்வியை எழுப்பினார்.
அப்போது அங்கிருந்தவர்கள் எல்லோரும் சேர்ந்து அப்படி ஒரு கேள்வியே வேண்டாம்; நம் இளைஞர்கள்தான் நம்நாட்டின் வருங்காலச் செல்வங்கள், தலைவர்கள், நிபுணர்கள். அவர்களை நம்பித்தான் ஒவ்வொரு குடும்பமும் நம் நாடும் இருக்கிறது. எனவே, அவர்களுடைய எதிர்காலத்தை பாதுகாக்க வேண்டியது நம் எல்லோருக்கும் உள்ள முக்கிய கடமையாகும் என்று கூறியதைக் கேட்டதும், முதல்வர் மு.க.ஸ்டாலின், இவர்களிடம் நாம் எதையும் கூறாமலேயே இவர்கள் எல்லாம் நமக்கு வழிகாட்டுவது போல் பதில் கூறி மிகுந்த விழிப்போடு இருப்பதைக் கண்டு நமக்கு பெருமித உணர்வு தோன்றுகிறது என்று குறிப்பிட்டார்.
அதேபோல, டெல்லியின் அதிகாரத்திற்கு அடிபணியாமல் தமிழ்நாட்டின் உரிமையைக் காக்கும் முதல்வர் நம் மாநிலத்தை ஆள வேண்டுமா என்றும், இவை அனைத்தும் சாத்தியப்பட – நிலையான ஆட்சியை வழங்கிட மு.க.ஸ்டாலின் போன்ற ஒரு தலைவரால் மட்டும் முடியும் என்று நம்புகிறீர்களா என்றும் அப்படியானால், நம் மாநிலத்தின் கோடிக்கணக்கான குடும்பங்களுடன், தாங்களும், தங்கள் குடும்பமும் ஓரணியில் தமிழ்நாடு என கரம் கோர்க்க விரும்புகிறீர்களா என்றும் கேள்விகளை எழுப்பினார். அங்கிருந்த பொதுமக்கள் எல்லாம் ஆம்.. ஆம்.. என்று ஒரே குரலில் மறு மொழி கூறினர். முதல்வர் தொடங்கியுள்ள ஓரணியில் தமிழ்நாடு எனும் இயக்கம் மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்த அணியில் நாங்கள் அனைவரும் உங்கள் பக்கம்தான் இருக்கிறோம் என்றனர்.
தமிழ்நாட்டை கல்வி, தொழில், பொருளாதார வளர்ச்சிமிக்க மாநிலமாக-இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக இப்போது மட்டுமல்ல, எப்போதும் நிலையாக விளங்கச் செய்வதற்கு தாங்கள்தான் என்றும் முதல்வராக திகழ வேண்டும். தங்களைப் போன்ற தொலைநோக்கு பார்வையும், கூர்ந்த மதியும் கொண்டுள்ள பேரறிவாளர்கள்தான் தமிழ்நாட்டை என்றும் தொடர்ந்து ஆட்சி புரிந்திட வேண்டும் என்பது எங்கள் அனைவரிடமும் உள்ள அசைக்க முடியாத ஒரே கருத்தாகும். ஓரணியில் தமிழ்நாடு என்னும் ஒரே சிந்தனையில் நாங்கள் அனைவரும் உள்ளோம் என்று அந்தப் பகுதியில் வாழும் மக்கள் அனைவரும் ஒரே குரலில் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் அவர்களிடம் கூறினர்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக இணை அமைப்புச் செயலாளர் அன்பகம் கலை, பகுதிச் செயலாளர் நந்தனம் மதி மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியின் நிர்வாகிகள் உடனிருந்தனர். இதேபோல திமுகவினர் தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் பரப்புரையை நேற்று முதல் தொடங்கினர். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், திமுக முன்னோடிகள் அனைவரும் அவரவர் சொந்த வாக்குச்சாவடிகளில் இருக்கும் வீடுகளுக்கு நேரில் சென்று மக்களை சந்தித்தனர்.
திமுக செயல்வீரர்கள் ஒருவர் விடாமல் வீட்டுக்கு வீடு சென்று பரப்புரையில் ஈடுபட்டனர். மக்களை சந்தித்த திமுகவினர் திமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும், திமுக நடத்தியுள்ள மாநில உரிமை போராட்டங்களையும் மக்களிடத்தில் எடுத்துக்கூறினர். ஒவ்வொரு வாக்காளரையும் ‘‘ஓரணியில் தமிழ்நாடு’’ என்று பிரசார இயக்கத்தில் இணைத்தும் வருகின்றனர். மேலும் மக்களை நேரில் சந்திக்கும் திமுகவினர், திமுக உறுப்பினர் சேர்க்கை படிவத்தையும் வழங்கினர். அந்த உறுப்பினர் சேர்க்கை படிவத்தில் 6 கேள்விகள் கேட்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம், இல்லை என்ற வடிவில் மக்கள் பதிலளிக்கும் வகையில் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
‘ஓரணியில் தமிழ்நாடு’ என்ற பரப்புரையின்போது கேட்கப்படும் 6 கேள்விகளுக்கு பதிலளித்து திமுக உறுப்பினராக மக்கள் இணையலாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஓரணியில் தமிழ்நாட்டில் இணைய 94890 94890 என்ற எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. இதில் அழைத்தும் இணையலாம் என்றும் திமுகவினர் தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்த பரப்புரையின் முக்கிய அம்சமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து இல்லங்களையும் 100 சதவீதம் சந்திக்க வேண்டும். எதிர்கட்சியினர் இல்லங்களுக்கும் நேரில் சென்று பேச வேண்டும் என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார்.
அதன்படி தமிழகம் முழுவதும் ஒருவர் வீடு விடாமல் திமுகவினர் மக்களை சந்தித்து வருகின்றனர். திமுகவினர் செல்லும் இடங்களில் எல்லாம் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து வருகின்றனர். இதனால், திமுகவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர். ஓரணியில் தமிழ்நாடு பயணம் மொத்தம் 45 நாட்கள் நடக்கிறது. ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு, தமிழ்நாடு முழுக்க ஓரணியில் தமிழ்நாடு நிறைவு விழாக்கள் நடைபெற உள்ளது. 10 மாதத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் உறுப்பினர் சேர்க்கை பணியை மினி தேர்தல் பரப்புரையாக திமுகவினர் உற்சாகமாக மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
* இந்த ஆட்சியில் எல்லாமே நல்லா தான் இருக்கிறது
ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் மக்களை சந்தித்து பேசினார். அப்போது மக்களிடம் அவர் கருத்துகளை கேட்டார். முதல்வர் சந்தித்து பேசியது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: ஓரணியில் தமிழ்நாடு என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வந்து போனார். எங்கள் குறைகளை கேட்டார். இந்த ஆட்சி பிடித்து இருக்கிறதா… எங்க ஆட்சி எப்படி செயல்படுகிறது… எல்லாம் நல்லா நடக்கிறதா? என்று கேட்டார். எல்லாமே நல்லா தான் இருக்கிறது என்று பதில் சொன்னோம். மகளிருக்கு மாதம் ரூ.1000 உதவி தொகை கொடுக்கிறார்கள்.
இலவச பஸ் விடுறாங்க. மேலும், மேலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நல்லா இருக்க வாழ்த்துகள். மீண்டும் ஆட்சிக்கு அவர் தான் வருவார். கண்டிப்பாக நாங்கள் எதிர்பார்க்கிறோம். இந்த ஆட்சியில் எந்த குறையும் இல்லை. ஏதாவது பிரச்னை என்றால் உடனடியாக வந்து நடவடிக்கை எடுக்கிறார்கள். தெருவில் பிரச்னை என்றால் போன் போட்டால் உடனே ஆட்கள் வந்து சரி செய்து வைக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் கூறினர்.
* ‘சாதி-மதம்-அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்’
திமுக தலைவர், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைத்தளம் பதிவில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டின் மண்-மொழி-மானம் காக்க, சாதி-மதம்-அரசியல் கடந்து ஓரணியில் தமிழ்நாடு வெல்லட்டும்! இதற்காக அடுத்த 45 நாட்கள், திமுக மாவட்ட செயலாளர்கள்-சட்டமன்ற உறுப்பினர்கள்-நாடாளுமன்ற உறுப்பினர்கள்-மூத்த முன்னோடிகள் என அனைவரும் பரப்புரையில் ஈடுபட்டு, தமிழ்நாட்டிலுள்ள அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.
The post ‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கம் தொடக்கம் வீடு வீடாக மக்களை சந்தித்தார் மு.க.ஸ்டாலின்: அரசின் 4 ஆண்டு சாதனைகள் குறித்து தமிழ்நாடு முழுவதும் திமுகவினர் பரப்புரை appeared first on Dinakaran.
