மோடி ஆட்சியில் நேர்ந்த அவலம்; கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: காங்கிரஸ் பொதுசெயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது: மோடி அரசு கடந்த 11 ஆண்டுகால ஆட்சியில் நாட்டின் பொருளாதாரத்தை நாசமாக்கி விட்டது. மக்கள் வாழ்க்கையை மேம்படுத்த எந்தவொரு முயற்சியும் எடுக்கப்படவில்லை. அனைத்து கொள்கைகளும் முதலாளித்துவ நண்பர்களுக்காகவே எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஏற்படும் இழப்புகளை மக்கள் அனுபவித்து வருகின்றனர். ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு வகையில் இந்த உண்மை அம்பலமாகி வருகிறது.

ரிசர்வ் வங்கி சமீபத்தில் வெளியிட்ட ஓர் அறிக்கை, நாட்டின் பொருளாதார நிலை குறித்த கவலையை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி, கடந்த 2 ஆண்டுகளில் நாட்டில் கடன் பெற்ற ஒவ்வொரு நபரின் சராசரி கடன் ரூ.90,000 அதிகரித்துள்ளது. 2023 மார்ச் மாதத்தில் ரூ.3.9 லட்சமாக இருந்த தனி நபர் கடன் சுமை கடந்த மார்ச்சில் ரூ.4.8 லட்சமாக அதிகரித்துள்ளது. மோடி ஆட்சியில் நாட்டின் கடன் சுமை உச்சத்தில் உள்ளது. ஆனால், சில புள்ளி விவரங்கள் மூலம் இத்தகைய குறைபாடுகளை மறைக்க மோடி அரசு முயற்சிக்கிறது. மக்கள் தங்கள் வருமானத்தில் 25.7 சதவீதத்தை, கடனை திருப்பிச் செலுத்த செலவிடுகின்றனர். அதிகபட்சமாக 55% கிரெடிட் கார்டு, மொபைல் இஎம்ஐக்கே போய் விடுகிறது.

பணவீக்கத்தால் குடும்பங்கள் தங்கள் வருமானத்தில் வாழ முடியாமல் கடன் வாங்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதில் பாதுகாப்பற்ற கடன்கள் 25 சதவீதத்தை தாண்டி விட்டன. மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால், கடந்த மார்ச் நிலவரப்படி, வௌிநாடுகளுக்கு இந்தியா செலுத்த வேண்டிய கடன் ரூ.62.5 லட்சம் கோடியாக உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 சதவீதம் அதிகம். இளைஞர்கள் வேலையின்றி பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர். பணவீக்கத்தால் மக்கள் சிரமப்படுகின்றனர். அரசியலமைப்பு நிறுவனங்கள் நசுக்கப்படுகின்றன. மக்கள் கடனில் மூழ்கி வருகின்றனர். மோடியின் நெருங்கிய நண்பர்கள் மட்டும் லாபம் ஈட்டுகிறார்கள். அவர்களின் செல்வம் அதிகரித்து வருகிறது என்று கூறி உள்ளார்.

The post மோடி ஆட்சியில் நேர்ந்த அவலம்; கடந்த 2 ஆண்டுகளில் தனிநபர் கடன் ரூ.4.8 லட்சமாக அதிகரிப்பு: காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு appeared first on Dinakaran.

Related Stories: