×

கிளப் உலகக் கோப்பை கால்பந்து; மண்டியிட்ட மான்டர்ரே: காலிறுதியில் டார்ட்மண்ட்

நியுயார்க்: ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று, ஜெர்மனியை சேர்ந்த பொருஸியா டார்ட்மண்ட் அணி, மெக்சிகோவை சேர்ந்த மான்டர்ரே அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது. ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள், அமெரிக்காவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகின்றன. இப்போட்டிகளில், உலகின் புகழ்பெற்ற 32 அணிகள் பங்கேற்றுள்ளன. அவை 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வந்தன. போட்டிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில், தற்போது நாக்அவுட் சுற்று போட்டிகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில் நேற்று நடந்த நாக்அவுட் சுற்றுப் போட்டியில் ஜெர்மனியை சேர்ந்த பொருஸியா டார்ட்மண்ட், மெக்சிகோவை சேர்ந்த மான்டர்ரே அணிகள் மோதின. போட்டியின் துவக்கம் முதல் டார்ட்மண்ட் அணி வீரர்கள் துடிப்புடன் செயல்பட்டு கோலடிப்பதில் முனைப்பு காட்டினர். அந்த அணியின் ஷெர்ஹோ குராஸி, ஆட்டத்தின் 14 மற்றும் 24வது நிமிடங்களில் 2 கோல் போட்டு அணியை முன்னிலைப் படுத்தினார். ஆட்டத்தின் 2ம் பாதியில் மான்டர்ரே அணியை சேர்ந்த ஜெர்மேன் பெர்டெரேமே ஒரு கோல் போட்டார். அதன் பின் யாராலும் கோல் போட முடியவில்லை. அதனால், 2-1 என்ற கோல் கணக்கில் வென்ற டார்ட்மண்ட் அணி காலிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

The post கிளப் உலகக் கோப்பை கால்பந்து; மண்டியிட்ட மான்டர்ரே: காலிறுதியில் டார்ட்மண்ட் appeared first on Dinakaran.

Tags : Club World Cup ,Monterrey ,Dortmund ,New York ,FIFA Club World Cup ,Borussia Dortmund ,Germany ,Mexico ,Dinakaran ,
× RELATED இந்த ஆண்டில் ‘கூகுளில்’ அதிகம்...