வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில்

திருவண்ணாமலை, ஜூலை 3: துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் நடைபெறும் அரசு வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு மேற்கொண்டார். திருவண்ணாமலை மாவட்டத்தில், பல்வேறு அரசு துறைகளில் சார்பில் நடைபெறும் வளர்ச்சி திட்ட பணிகளை நேரில் சென்று கலெக்டர் தர்ப்பகராஜ் ஆய்வு நடத்தி வருகிறார். அதன்படி, துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வள்ளிவாகை ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டின் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.3.17 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யபடுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும், வள்ளிவாகை ஊராட்சியில் முதலமைச்சரின் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.53.52 லட்சம் மதிப்பீட்டில் வள்ளிநகர் முதல் வேடியப்பன் நகர் வரை புதிய தார்சாலை அமைக்கும் பணியினை ஆய்வு மேற்கொண்டு சாலை முறையாக அமைக்கப்படுகிறதா என பரிசோதனை கருவிகளின் மூலம் ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைந்து முடிக்க துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதைத்தொடர்ந்து, சானாந்தல் ஊராட்சியில் 2024- 25ம் நிதியாண்டில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.9.68 லட்சம் மதிப்பீட்டில் நாற்றங்கால் பண்ணையில் மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு உற்பத்தி செய்யப்படும் மரக்கன்றுகள் குறித்தும், எவ்வளவு நபர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள் என கேட்டறிந்து மரக்கன்றினை முறையாக பாரமரித்து வளர்க்க வேண்டும் என்றார்.

முன்னதாக, மல்லவாடி ஊராட்சியில் உள்ள அரசு மறுவாழ்வு இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். இந்த மறுவாழ்வு இல்லம் 1973ம் ஆண்டு அப்போதைய முதல்வர் கலைஞரால் அமைக்கப்பட்டது. இந்த மையத்தில், தற்போது 33 தொழுநோயாளிகள் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், தங்கும் வசதி மற்றும் உணவின் தரத்தை ஆய்வு செய்த கலெக்டர், தொழுநோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் மணி உட்பட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு விரைந்து முடிக்க உத்தரவு துரிஞ்சாபுரம் ஒன்றியத்தில் appeared first on Dinakaran.

Related Stories: