×

போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை

சென்னை: காவல் துறையால் கொல்லப்பட்ட கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும் என அரசியல் கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர்): கோயில் காவலாளி அஜித்குமார் மீது முதல் தகவல் அறிக்கை கூட பதிவு செய்யாமல், காவல் நிலையத்துக்கு கொண்டு செல்லாமல், வெளியிடங்களில் வைத்து கொடுமையான தாக்குதல் நடத்த யார் உத்தரவிட்டது. எந்த ஆதாரத்தின் அவசியம் கருதி தனிப்படை காவலர்கள் அனுப்பப்பட்டனர். வாய்வழி வந்த புகாருக்கு தொடர்ச்சியாக, இடைவிடாத அழுத்தம் கொடுத்த சக்தி எது என்பது போன்ற தொடர் வினாக்களுக்கு அரசு பொறுப்பான பதில் அளிக்க வேண்டும். காவல் துறையின் விசாரணை முறையை, மனித உரிமைகளை மீறாத வகையில் முற்றிலும் மாற்றியமைக்க வேண்டியது காலத்தின் தேவையாகும். மக்கள் நலன், பொதுப் பாதுகாப்பு, சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு மையமாகக் கொண்டு காவல் துறையின் கொள்கையை மாற்றி அமைக்க வேண்டும். காவல் துறையால் கொல்லப்பட்ட கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும்.

அன்புமணி (பாமக தலைவர்): திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் கோயிலுக்கு வந்த சிலர் அவர்களின் காரில் வைக்கப்பட்டிருந்த நகைகள் காணாமல் போய்விட்டதாக கூறியதை தொடர்ந்து, அவர்களிடம் புகாரைப் பெற்று வழக்குப் பதிவு கூட செய்யாத காவல்துறையினர், அஜித்குமார் உள்ளிட்ட சிலரை சட்டவிரோதமாக பிடித்துச் சென்று அவர் பணியாற்றிய கோயிலிலும், வேறு இடங்களிலும் வைத்து கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர். அதற்கான காரணம் நகையை இழந்த பெண்கள், மூத்த ஐஏஎஸ் அதிகாரி ஒருவரின் உறவினர்கள் என்பதுதான். இவை அனைத்துக்கும் மேலாக மக்களுடன் மனிதநேயத்துடன் பழகுவது எப்படி என்பது குறித்து காவல்துறைக்கு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்.

ராமதாஸ் (பாமக நிறுவனர்): திருப்புவனத்தில் கோயில் காவலாளி அஜித்குமார் காவல்துறை விசாரணை முறையால்தான் இறந்து போனார் என்பதை அனைத்து தரப்பும் உறுதி செய்துள்ளது. காவலர்களுக்கு பணிச்சுமையும் மன அழுத்தமும் அதிகம் என்பதால் யோகா மற்றும் தியான பயிற்சிகளை தமிழ்நாடு காவல் தலைமையால் கொடுக்கப்பட்டதை சில ஆண்டுகள் முன்பு செய்தியாக பார்க்க முடிந்தது. ஒருசில இடங்கள் தவிர வேறெங்கும் அதுபோன்ற பயிற்சிகளுக்கு இப்போது காவலர்கள் அனுப்பப்படுவது இல்லை என்றே தகவல்கள் வருகிறது. அதை மீண்டும் முன்புபோலவே நடைமுறைப்படுத்த வேண்டும்.

The post போலீஸ் விசாரணையில் உயிரிழந்த கடைசி மனிதனாக அஜித்குமார் இருக்கட்டும்: அரசியல் கட்சி தலைவர்கள் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Ajith Kumar ,Chennai ,Mutharasan ,State Secretary ,Communist Party of India ,
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...