திருத்தணி, ஜூலை 2: ஓய்வுபெற்ற நீதிபதி வீட்டில் சீலிங் பேன் மற்றும் டிராக்டரின் பேட்டரியை திருடிச்சென்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம், கனகம்மாசத்திரம் அருகே காவேரிராஜபுரம் பகுதியில் வசிப்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி பி.டி.தினகரன். இவருக்குச் சொந்தமாக 300 ஏக்கர் நிலம் உள்ளது. அங்கு பூட்டியிருந்த பண்ணை வீட்டில், கடந்த மாதம் 15ம் தேதி புகுந்த மர்ம நபர்கள், வீட்டின் பூட்டை உடைத்து சீலிங் பேன் மற்றும் டிராக்டரின் பேட்டரியை திருடிச்சென்றதாக கனகம்மாசத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், வழக்குப்பதிவு செய்து, எஸ்பி தலைமையிலான தனிப்படை எஸ்ஐ குமார் மற்றும் போலீசார் திருவாலங்காடு அருகே தோமூர் கிராமத்தைச் சேர்ந்த பிரபாகரன் (31), ஆந்திர மாநிலம், திருப்பதி பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (29), ராமஞ்சேரியைச் சேர்ந்த கமலக்கண்ணன் (26) ஆகிய 3 பேரை நேற்று கைது செய்தனர். பின்னர், அவர்களிடமிருந்து கார், பைக், சீலிங் பேன் மற்றும் கத்தி ஆகியவற்றை பறிமுதல் செய்த போலீசார், அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஓய்வு பெற்ற நீதிபதி வீட்டில் கைவரிசை: 3 பேர் கைது appeared first on Dinakaran.
