×

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம்

சிதம்பரம், ஜூலை 1: கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற நடராஜர் கோயிலில் ஆனி திருமஞ்சன உற்சவ திருவிழா கடந்த 23ம் தேதி கொடி ஏற்றத்துடன் வெகு விமரிசையாக தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து காலை, மாலை இருவேளைகளிலும் பல்வேறு வாகனங்களில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்று வருகிறது. இத்திருவிழாவில் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று(1ம் தேதி) நடைபெறுகிறது. இதில் அதிகாலை 4.30 மணி அளவில், மூலவரான சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி கோயிலில் இருந்து எழுந்தருளி உள்பிரகாரம் பகுதியில் வலம் வந்து, பின்னர் தேவ சபையில் பூஜை நடைபெறுகிறது. அதனை அடுத்து கீழ சன்னதி வழியாக தேரில் எழுந்தருளி தேரோட்டம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

இதனைத் தொடர்ந்து அன்று இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்டபத்தில் ஏக கால லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது. ஜூலை 2ம் தேதி அதி காலை சூரிய உதயத்துக்கு முன் காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத மந்நடராஜ மூர்த்திக்கு ராஜசபையில் மகாபிஷேகம் நடைபெறுகிறது. பின்னர், காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூர்த்தி வீதி உலா வந்த பின்னர், பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆனி திருமஞ்சன தரிசனமும், ஞானகாச சித்சபா பிரவேசமும் நடைபெறுகின்றன. ஜூலை 3ல் பஞ்ச மூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலா உற்சவமும், 4ம் தேதி தெப்ப உற்சவத்துடன் திருவிழா நிறைவு பெறுகிறது. திருவிழா நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.

The post சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன தேரோட்டம் appeared first on Dinakaran.

Tags : Chidambaram Nataraja Temple Ani Thirumanjana Therottam ,Chidambaram ,Ani Thirumanjana Utsava festival ,Nataraja Temple ,Chidambaram, Cuddalore district ,
× RELATED கல்லூரி மாணவி மாயம்