நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் பொது இடங்களில் தடையை மீறி பேனர் வைத்ததாக தவெகவினர் மீது 53 வழக்குகள் பதிவு: பெருநகர காவல்துறை நடவடிக்கை

சென்னை: நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதையடுத்து, சென்னையில் நீதிமன்ற உத்தரவை மீறி பொது இடங்களில் வாழ்த்து பேனர்கள் வைத்ததாக தவெகவினர்கள் மீது சென்னை பெருநகர காவல்துறை 53 வழக்குகள் பதிவு செய்துள்ளது. நடிகர் விஜய் பிறந்த நாள் விழா நேற்று நடந்தது. இதனால், தமிழக வெற்றி கழகம் சார்பில் சென்னை முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலைகள் மற்றும் தெரு முனைகளில் அதிகளவில் நடிகர் விஜய் புகைப்படத்துடன் 10 அடி மற்றும் 20 அடி பேனர்கள் வைத்தனர்.

சென்னையில் பொது இடங்களில் பேனர் வைக்க கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் ஏற்கனவே தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. அப்படி பேனர்கள் வைக்க வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட காவல் நிலையம் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளிடம் முன் அனுமதி பெற்று வைக்கலாம் என்று தெரிவித்திருந்தனர். இந்நிலையில், நடிகர் விஜய் பிறந்த நாளில் அவரது கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் எந்த வித முன் அனுமதியும் காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சியிடம் பெறாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சென்னை முழுவதும் பேனர்கள் வைக்கப்பட்டது. குறிப்பாக சென்னை பெருநகர காவல் எல்லையில் வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலை, நீலாங்கரை, திருவான்மியூர், திருவொற்றியூர், ராயபுரம், அண்ணாநகர், தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, கிண்டி, கோயம்பேடு என 53 இடங்களில் பெரிய அளவில் தமிழக வெற்றி கழகத்தினர் பேனர்கள் மற்றும் கொடிகள் அமைத்து பொது இடங்களில் கேக் வெட்டியும், பட்டாசுகள் வெடித்தும் நடிகர் விஜயின் பிறந்த நாள் விழாவை கொண்டாடினர்.

இதுகுறித்து பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அளித்த தகவலின் படி சென்னை பெருநகர காவல் எல்லையில் முன் அனுமதியின்றி பேனர்கள் மற்றும் பொது இடங்களில் பட்டாசுகள் வெடித்து கேக் வெட்டிய தமிழக வெற்றி கழகத்தின் மீது 53 வழக்குகள் தனித்தனியாக சம்பந்தப்பட்ட தவெக நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வேளச்சேரி, கிழக்கு கடற்கரை சாலைகளில் விபத்து ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்ட பேனர்களை காவல்துறையினர் அகற்றினர். அப்போது போலீசாரை பணி செய்யவிடாமல் தவெக வினர் தடுத்தனர். இருந்தாலும் போலீசார் மாநகராட்சி ஊழியர்கள் உதவியுடன் அபாயகரமாக அமைக்கப்பட்ட பேனர்களை அகற்றினர்.

The post நடிகர் விஜய் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சென்னையில் பொது இடங்களில் தடையை மீறி பேனர் வைத்ததாக தவெகவினர் மீது 53 வழக்குகள் பதிவு: பெருநகர காவல்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Related Stories: