கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு

கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் 18 மணி நேர தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டது. பச்சமலை எஸ்டேட்டில் தாய் கண் முன் 7 வயது சிறுமியை சிறுத்தை தூக்கிச் சென்றது. சிறுத்தை கவ்விச் சென்ற சிறுமியை நேற்று மாலை முதல் வனத்துறை தேடி வந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது.

கோவை மாவட்டம் வால்பாறை அருகே பச்சைமலை எஸ்டேட் பகுதியில் காளியம்மன் கோயில் குடியிருப்பு அருகில் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மனோஜ் முண்டா, மோனிகா தேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ரோஷினி குமாரி என்ற 7 வயது மகள் இருந்தார்.

நேற்று ரோஷினி குமாரி வீட்டிற்கு வெளியே தண்ணீர் பிடிக்கும் இடத்தில் நின்றுள்ளார். அப்போது தேயிலை தோட்டத்தில் பதுங்கி இருந்த சிறுத்தை, தாயின் கண் முன்னே சிறுமி ரோஷினி குமாரியை இழுத்துச் சென்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் தாயின் கண்ணெதிரே தூக்கி சென்ற பார்த்து அலறி கூச்சலிட்டுள்ளார்.

அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் மற்றும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இன்று காலை சிறுமியின் உடை மட்டுமே கிடைத்த நிலையில் குழுக்களாக பிரிந்தும், ட்ரோன் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் தேடும் பணியில் தோய்வு ஏற்பட்டது.

இந்நிலையில் தற்போது சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் 18 மணி நேர தேடுதலுக்குப் பின் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை சிறுத்தை தூக்கிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே அச்சத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

The post கோவை மாவட்டம் வால்பாறை அருகே சிறுத்தை தூக்கிச் சென்ற சிறுமியின் உடல் மீட்பு appeared first on Dinakaran.

Related Stories: