×

பாமகவில் தொடரும் அதிகார சண்டை; கடலூரில் அன்புமணி தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்: ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் ஏற்பாடு

கடலூர்: கடலூரில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் அன்புமணி தலைமையில் இன்று மாலை நடக்கிறது. பாமகவில் நிறுவனர் ராமதாசுக்கும், மகன் அன்புமணிக்கும் கட்சியில் தலைவர் பதவியும், அதிகாரமும் யாருக்கு என்பதில் கடுமையான மோதல் நீடித்து வருகிறது. அன்புமணியின் செயல்பாட்டில் அதிருப்தியடைந்த ராமதாஸ் கட்சியை முழுமையாக தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர நிர்வாகிகள் மாற்றம் உள்ளிட்ட பல முடிவுகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், அன்புமணியும் நீக்கப்பட்டவர்களுக்கு அதே பதவியை கொடுத்தும், தனக்கு ஆதரவான மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், மாநில நிர்வாகிகளை சந்தித்து வருகிறார். மேலும், ஜூலை மாதம் அன்புமணி நடைபயணம் மேற்கொள்ள உள்ள நிலையில் மாவட்டம் தோறும் பொதுக்குழு கூட்டத்தையும் கூட்டி கட்சியில் தனக்கான செல்வாக்கை தந்தைக்கு நிரூபித்தும் வருகிறார்.

இதன் ஒரு பகுதியாக கடலூர் சுப்பராயலு செட்டியார் திருமண மண்டபத்தில் இன்று மாலை 3 மணி அளவில் ஒருங்கிணைந்த மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில் அன்புமணியின் ஆதரவாளர்கள் கலந்து கொள்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை கடலூர் கிழக்கு மாவட்ட செயலாளரான வழக்கறிஞர் சண்.முத்துக்கிருஷ்ணன், மேற்கு மாவட்ட செயலாளர் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன், தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமகேஷ் ஆகியோர் செய்து வருகின்றனர். ஆனால் இவர்கள் அனைவரும் நீக்கப்பட்ட நிலையில், கடலூர் மாவட்ட புதிய செயலாளர்களாக கோபிநாத் (கிழக்கு), சுரேஷ் (மேற்கு), ெஜகன் (வடக்கு), சசீதரன்(தெற்கு) ஆகியோரை ராமதாஸ் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஆனால் பழைய மாவட்ட செயலாளர்களே தொடர்வார்கள் என்று அன்புமணி அறிவித்ததால் அவர்கள் இன்றைய பொதுக்குழு ஏற்பாடுகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இன்றைய கூட்டத்தில் அன்புமணி என்ன பேசுவார்? அதற்கு கட்சியின் நிறுவனர் ராமதாஸ் என்ன பதிலடி கொடுப்பார்? என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதேநேரத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் இரு அதிகார மையம் இருப்பதால், கட்சியின் நீடிக்கும் பிரச்னைகளால் தொண்டர்கள் குழப்பத்தில் உள்ளனர். மேலும், இரு தரப்பில் பிரச்னை ஏற்படாமல் இருக்க போலீஸ் பாதுகாப்பும் அளிக்கப்பட உள்ளது.

The post பாமகவில் தொடரும் அதிகார சண்டை; கடலூரில் அன்புமணி தலைமையில் இன்று பொதுக்குழு கூட்டம்: ராமதாசால் நீக்கப்பட்டவர்கள் ஏற்பாடு appeared first on Dinakaran.

Tags :
× RELATED தமிழகத்தில் 85 லட்சம் வாக்காளர்கள்...