சென்னை பள்ளிகளில் புதிதாக 21,734 மாணவர்கள் சேர்க்கை 4 புதிய பள்ளி பேருந்துகளில் தினமும் 373 மாணவ, மாணவிகள் பயணம்: மாநகராட்சி தகவல்

சென்னை, ஜூன் 19: சென்னை பள்ளிகளில் இந்த கல்வியாண்டில் இதுவரை புதிதாக 21,734 பேர் சேர்ந்துள்ளனர் என்றும், சென்னை பள்ளிளுக்கான 4 புதிய பேருந்துகளில் தினமும் 373 மாணவ, மாணவிகள் பயணம் செய்து வருகின்றனர் என்றும் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. சென்னை மாநகராட்சி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் சார்பில் 206 தொடக்கப்பள்ளிகள், 130 நடுநிலைப் பள்ளிகள், 46 உயர்நிலைப் பள்ளிகள், 35 மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 417 சென்னை பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் 3,879 ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். சென்னை மாநகராட்சியின் அனைத்து சென்னை பள்ளிகளின் வாயிலாக மாணவ, மாணவிகளுக்கு தரமான கல்வி, வாழ்க்கைத் திறன்களை மேம்படுத்தும் வகையில் பல்வேறு திறன் சார்ந்த பயிற்சி, கற்றல், கற்பித்தலுக்கு உகந்த பள்ளிக் கட்டமைப்புகள், தற்காப்புக் கலைகள், பாரம்பரியக் கலைகள், பல்வேறு விளையாட்டுப் பயிற்சிகள் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது.

மேலும், மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்திடும் வகையில் பல்வேறு உட்கட்டமைப்புகள் மற்றும் அடிப்படை வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதிக மதிப்பெண்கள் பெறும் மாணவர்களுக்கும், சென்னை பள்ளிகளில் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை வழங்கி ஊக்குவிக்கப்படுகின்றனர். சென்னை மாநகராட்சியின் சென்னை பள்ளிகளில் 2025-26ம் கல்வியாண்டில் எல்.கே.ஜி. முதல் 12ம் வகுப்பு வரை புதிதாக 21,734 மாணவ, மாணவியர் சேர்ந்துள்ளனர். இந்நிலையில், தமிழக முதல்வர், சென்னை பள்ளிகளின் பயன்பாட்டிற்காக ரூ.1.11 கோடி மதிப்பீட்டில் 4 புதிய பள்ளிப் பேருந்துகள் சேவையை தொடங்கி வைத்தார்.

இந்த பேருந்துகளில் தலா ஒரு ஓட்டுநர் மற்றும் ஒரு பாதுகாவலர் நியமிக்கப்பட்டு, பேருந்துகள் இயக்கப்படுகிறது. இந்த பேருந்துகள் மூலம் நாள்தோறும் தண்டையார்பேட்டை பிரதான சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப்பள்ளியைச் சார்ந்த 23 மாணவர்கள், புத்தா தெரு-சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளியைச் சார்ந்த 44 மாணவர்கள், புதிய நாப்பாளையம் மற்றும் பழைய நாப்பாளையைத்தைச் சார்ந்த 70 மாணவர்கள், குளக்கரை-சென்னை தொடக்கப் பள்ளியைச் சார்ந்த 16 மாணவர்கள், ஆண்டார்குப்பம்-சென்னை நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த 80 மாணவர்கள், காமராஜ் அவென்யூ-சென்னை நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த 40 மாணவர்கள், ஈஞ்சம்பாக்கம் சென்னை பள்ளியைச் சார்ந்த 100 மாணவர்கள் என மொத்தம் 373 மாணவர்கள் பேருந்துகளின் வசதியை பயன்படுத்தி பள்ளிக்குச் சென்று வருகின்றனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கல்வி சார்ந்த பயன்பாட்டுக்கு செல்லும் பேருந்துகள்
சென்னை பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி மட்டுமல்லாமல் பள்ளிப் படிப்பின்போதே பல்வேறு இடங்களைப் பார்வையிட்டு, பொது அறிவைப் பெறும் வகையில் கல்விச் சுற்றுலா அழைத்துச் செல்வதற்கும், பல்வகை விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும் இடங்களுக்கு அழைத்துச் செல்லுதல் உள்ளிட்ட கல்வி சார்ந்த பல்வகைப் பயன்பாட்டிற்கும் இந்த பேருந்துகள் பெரிதும் பயனுள்ளதாக அமைந்துள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

The post சென்னை பள்ளிகளில் புதிதாக 21,734 மாணவர்கள் சேர்க்கை 4 புதிய பள்ளி பேருந்துகளில் தினமும் 373 மாணவ, மாணவிகள் பயணம்: மாநகராட்சி தகவல் appeared first on Dinakaran.

Related Stories: