சென்னை, ஜூலை 29: ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு செல்லும் பக்தர்களால், பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. ஆண்டுதோறும் ஆடிப்பூர விழாவையொட்டி மேல்மருவத்தூர், மேல்மலையனூர், சமயபுரம், மற்றும் தென் மாவட்டத்தில் உள்ள அம்மன் கோயிலுக்கு சென்னை புறநகர் பகுதியில் இருந்து கார் மற்றும் அரசு பேருந்துகளில் பக்தர்கள் அதிகளவில் செல்வது வழக்கம். அதன்படி, நேற்று ஆடிப்பூர விழாவையொட்டி ஏராளமானோர் சென்னையில் இருந்து மேற்கண்ட கோயில்களுக்கு வாகனங்களில் சென்றதால், செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக வாகனங்கள் காத்திருந்து செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. குறிப்பாக விசேஷ நாட்கள், வார விடுமுறை உள்ளிட்ட நேரங்களில் இந்த சுங்கச்சாவடியில் கூடுதலாக கவுன்டர்கள் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் தற்போது சென்னையிலிருந்து திருச்சி மார்க்கமாக செல்லும் சாலையில் 4 கவுன்டர்கள் மட்டுமே உள்ளதால், வாகனங்கள் வரிசையில் நின்று, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
The post ஆடிப்பூரத்தையொட்டி அம்மன் கோயில்களுக்கு சென்றவர்களால் பரனூர் சுங்கச்சாவடியில் நெரிசல் appeared first on Dinakaran.
