சென்னை: ரூ.471 கோடியில் அமைய உள்ள சென்னையின் 6வது நீர்த்தேக்கம் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற நீர்வளத்துறைக்கு மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு அறிவுறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், சோழவரம், செம்பரம்பாக்கம், தேர்வாய் கண்டிகை ஆகிய 5 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீரை கொண்டு சென்னையில் குடிநீர் தேவை பூர்த்திச் செய்யப்படுகிறது. இந்த 5 ஏரிகளின் மொத்த கொள்ளளவு 11.757 டி.எம்.சி. ஆகும். கோடைக்காலத்தில் இந்த குடிநீர் ஏரிகளில் வறட்சி ஏற்படும் போது சென்னையில் கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறது. அதேபோல் சென்னையின் ஏற்படும் வெள்ள காலங்களுக்கு பின் ஏரிகளில் இருந்து திறந்து விடும் தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. தற்போது, சென்னையின் குடிநீர் தேவைகள் நகரத்திலும் அதைச் சுற்றியுள்ள நீர் ஆதாரங்கள் மூலமாகவும், உப்பு நீர் குடிநீராக்கும் திட்டங்கள் மூலமாகவும் பூர்த்தி செய்யப்படுகின்றன. மேலும் சென்னையின் மக்கள் தொகை அதிகரித்து வருவதால் அடிப்படையான குடிநீர் தேவையும் உயர்ந்து கொண்டே வருகிறது.
அதன்படி தற்போது சென்னையின் நாள் ஒன்றுக்கு 1100 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதில் 350 மில்லியன் லிட்டர் குடிநீர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் மூலம் தண்ணீர் கிடைக்கிறது. இருப்பினும், நகரத்தின் அதிகரித்து வரும் மக்கள்தொகை மற்றும் மாறிவரும் காலநிலையுடன், அவ்வப்போது ஏற்படும் பற்றாக்குறையைத் தடுக்கவும், நீர் விநியோகத்தை சீராக்கவும் புதிய நீர்த்தேக்கம் உருவாக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதன்படி சென்னையை அடுத்த கோவளம் அருகே புதிய நீர்த்தேக்கம் அமைக்க நீர்வளத்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி சென்னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப, பருவநிலை மாற்றத்தாலும் அவ்வப்போது ஏற்படும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க திருப்போரூர் வட்டம் கோவளம் அருகே உள்ள பழைய மாமல்லபுரம் சாலை மற்றும் கிழக்கு கடற்கரைச் சாலைகளுக்கு இடையே 4375 ஏக்கர் பரப்பளவில் சென்னையின் 6வது நீர்த்தேக்கம் அமைக்கப்பட உள்ளது என கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்ெதாடரில் தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில் போது நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
இந்த நீர்தேக்கமானது ஆண்டுக்கு 2.25 டிஎம்சி நீரை சேமிக்கும் வகையிலும் 1.6 டிஎம்சி கொள்ளவுடன் ரூ.350 கோடியில் அமைய உள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 170 எம்எல்டி குடிநீரை கொண்டு சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நீர்த்தேக்கம் அமைகிறது. மேலும் அந்த நீர்த்தேக்கத்துக்கு ரூ.471 கோடி செலவாகும் எனவும் மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி நீர்த்தேக்கம் கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி நீர்வளத்துறை சார்பில் கடந்த மே 13ம் தேதி விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில் அனுமதி கோரிய விண்ணப்பத்தை மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு ஆய்வு செய்து வருகிறது. அதற்கு ேதவையான ஆவணங்களை நீர்வளத்துறை உடனுக்குடன் சமர்ப்பிக்கப்பட்டு வருகிறது. மேலும் கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்திடம் அனுமதி பெற நீர்வளத்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது.
The post ரூ.471 கோடியில் அமையவுள்ள கடலோர மண்டல ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி பெற உத்தரவு: மாநில நிபுணர் மதிப்பீட்டு குழு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.