சென்னை: சிதம்பரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தி கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் மக்கள் அதிகாரம் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பைச்சேர்ந்த முருகானந்தம், மணிமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது சேத்தியாத்தோப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து சிதம்பரம் முதலாவது நடுவர் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முருகானந்தம் உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர்.
வழக்கின் விசாரணை நீதிபதி பி.வேல்முருகன் முன்பு நடைபெற்றது. மனுதாரர்கள் தரப்பில் வழக்கறிஞர் ஏ.சுரேஷ் சக்திமுருகன் ஆஜரானார். காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் எஸ்.வினோத்குமார் ஆஜராகி வாதிட்டார்.
இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, குடியிருப்பு பகுதிகளில் இயங்கும் மதுபானக்கடைகள் ஏற்படுத்தும் சமூக பிரச்சனை குறித்து பொதுமக்கள் நியாயமான கவலைகளை எழுப்பும் சந்தர்பங்களில் அமைதியான போரட்டங்களை குற்றச்செயலாக கருதமுடியாது, அரசியல்கட்சிகள் தேர்தல் பிரச்சாரங்களின்போது டாஸ்மாக் கடைகளின் எண்ணிக்கையை குறைப்பாதாக வாக்குறுதிகளை அளித்தாலும் உண்மையில் இந்த கடைகளை மூடப்படுவதற்கு பதிலாக வேறுஇடத்திற்கு மாற்றப்படுதால் முக்கிய பிரச்னை தீர்க்கப்படாமல் உள்ளது. இதுபோன்ற அமைதியான போராட்டங்களில் பங்கேற்பவர் மீது வழக்குகளைப் பதிவு செய்வது, ஜனநாயக உரிமைக்கு எதிரானதாகும்.
இதுபோன்ற நடவடிக்கைகள், தொடர்ந்தால், மாநிலம் முழுவதும் இதேபோன்ற ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற நூற்றுக்கணக்கான பெண்கள் மீதும் வழக்குத் தொடர வேண்டிய நிலை ஏற்படும்.
அமைதியான போராட்டம், குறிப்பாக பொது சுகாதாரம் மற்றும் சமூக நலனைப் பாதிக்கும் விஷயங்களில், அரசியலமைப்பு ரீதியாக பாதுகாக்கப்பட்ட ஒன்றாகும். போராட்டங்கள் அமைதியாகவும் வன்முறையற்றதாகவும் தொடர்ந்தால், பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தவும் அரசிடமிருந்து உரிமைகளை கேட்கவும் முடியும். எனவே, மனுதாரர்கள் மீது சிதம்பரம் நடுவர் நீதிமன்றத்தில் உள்ள வழக்கு ரத்து செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளார்.
The post டாஸ்மாக் கடைக்கு எதிராக அமைதியான போராட்டத்தை குற்றமாக கருத முடியாது: மக்கள் அதிகாரம் வழக்கில் ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.