20 ஆண்டுகளுக்குப் பிறகு சைப்ரஸ் செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி ஆவார். இதையொட்டி அவரை கவுரவிக்கும் விதமாக சைப்ரசின் உயரிய விருதான ‘கிராண்ட் கிராஸ் ஆப் தி ஆர்டர் ஆப் தி மகாரியோஸ் 3’ விருதை பிரதமர் மோடிக்கு சைப்ரஸ் அதிபர் நிகோஸ் வழங்கி கவுரவித்தார். இந்த விருதை பெற்ற பிரதமர் மோடி, ‘‘இந்த விருதை 140 கோடி இந்தியர்களுக்கு இந்த விருதை அர்ப்பணிக்கிறேன். இது நம்பகமான இந்தியா-சைப்ரஸ் நட்புக்கு ஒரு உதாரணம். எதிர்காலத்தில் எங்கள் ஒத்துழைப்பு புதிய உச்சங்களை தொடும் என நம்புகிறேன்.
எங்கள் இரு நாடுகளின் முன்னேற்றத்தை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், அமைதியான, பாதுகாப்பான உலகத்தை உருவாக்குவதற்கும் பங்களிப்போம்’’ என்றார். இது பிரதமர் மோடி பெறும் 23வது சர்வதேச விருது. இதற்கு முன் பல்வேறு நாடுகள் பிரதமர் மோடிக்கு அந்நாடுகளின் உயரிய விருதுகளை வழங்கி உள்ளன. சைப்ரசில் பல்வேறு வர்த்தக நிறுவன அதிபர்களை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, உலகின் 3வது பெரிய பொருளாதார நாடான இந்தியாவில் முதலீடு செய்ய அழைப்பு விடுத்தார். சைப்ரஸ் பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி நேற்று கனடா புறப்பட்டு சென்றார்.
அங்கு கனனாஸ்கிசில் நடக்கும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்று பேச உள்ளார். மேலும் மாநாட்டின் இடையே பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேச உள்ளார். இஸ்ரேல்-ஈரான் மோதலுக்கு மத்தியில் நடக்கும் இந்த ஜி7 மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கின்றனர். பஹல்காம் தீவிரவாத தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத கட்டமைப்புகள் மீது இந்தியா தாக்குதல் நடத்திய பிறகு பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
* இது போருக்கான சகாப்தம் அல்ல
பிரதமர் மோடி, சைப்ரஸ் அதிபர் நிகோஸ் கிறிஸ்டோடவ்லிட்சை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த போது பிரதமர் மோடி கூறுகையில், ‘‘எல்லை தாண்டிய தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு சைப்ரஸ் அளித்த ஆதரவிற்கு நன்றி கூறுகிறோம். அனைத்து வடிவங்களிலும், வெளிப்பாடுகளிலும் தீவிரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவுடன் சைப்ரஸ் துணை நிற்பதாக உறுதி அளித்துள்ளது. மேற்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவில் நடந்து வரும் மோதல்கள் குறித்து நாங்கள் இருவரும் கவலை தெரிவித்தோம். இது போரின் சகாப்தம் அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதும், ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதும் மனிதகுலத்தின் வலியுறுத்தலாகும். இந்தியா-சைப்ரஸ் உறவில் புதிய அத்தியாயத்தை எழுத எனது இந்த வருகை ஒரு பொன்னான வாய்ப்பாக கருதுகிறேன்’’ என்றார்.
The post சைப்ரஸ் அதிபர் வழங்கி கவுரவிப்பு பிரதமர் மோடிக்கு உயரிய விருது: 140 கோடி இந்தியர்களுக்கும் அர்ப்பணிப்பதாக பெருமிதம் appeared first on Dinakaran.