இதன்காரணமாக உலகம் முழுவதும் கச்சா எண்ணெய் சந்தையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. உலகின் பெரும்பாலான நாடுகளுக்கு வளைகுடா நாடுகளில் இருந்தே கச்சா எண்ணெய் சப்ளை செய்யப்படுகிறது. ஈரான்-இஸ்ரேல் பகுதியில் உள்ள ஹார்மூஸ் ஜலசந்தி கடல் வழியே கப்பல்களில், கச்சா எண்ணெய் எடுத்து வரப்படுகிறது. இந்த போர் பதற்றத்தின் காரணமாக கச்சா எண்ணெய் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படும் அச்சம் ஏற்பட்டுள்ளது.
இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் உள்ளிட்ட எரிபொருள் தேவைக்கு கச்சா எண்ணெய் ஆண்டுக்கு 251 மில்லியன் டன் தேவைப்படுகிறது. இவற்றில் 12 சதவீதம் மட்டுமே உள்நாட்டு உற்பத்தியாக இருக்கிறது. மீதியுள்ள 88 சதவீதம் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. அதாவது 221 மில்லியன் டன் கச்சா எண்ணெய் இறக்குமதியாகிறது. அதில், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலைக்கு 40 சதவீத கச்சா எண்ணெய்யும், ஈரான், ஈராக், சவூதிஅரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிடம் இருந்து 60 சதவீத கச்சா எண்ணெய்யும் இறக்குமதி செய்யப்படுகிறது. இவற்றில் தற்போது வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில் தான், சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றத்தால், அந்த நாடுகளில் கச்சா எண்ணெய் உற்பத்தி, ஏற்றுமதி பாதிக்கப்பட்டுள்ளது.
இதன்காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 5 நாட்களாக கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த 11ம் தேதி பிராண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 65 டாலர் என்றிருந்தது. அதுவே இன்று காலை பீப்பாய் 74 டாலராக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த மே 5ம் தேதியன்று மிக குறைவாக 56 டாலர் என்ற நிலையிலேயே இருந்தது. இந்த கச்சா எண்ணெய் விலை உயர்வு என்பது 130 டாலர் வரை அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. அதனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலை உயரும் சூழல் உருவாகியிருப்பதால், வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கு மாற்றாக ரஷ்யாவில் இருந்து கூடுதலாக இறக்குமதி செய்ய எண்ணெய் நிறுவன அதிகாரிகள் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். ஈரான், ஈராக், சவூதியில் இருந்து கச்சா எண்ணெய் வர பாதிப்பு ஏற்படும் என்றால், உடனடியாக ரஷ்யாவில் இருந்து அதிகளவு கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்திட இருநாடுகளின் உயர் அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளது. அப்படி ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரித்தால், பெட்ரோல், டீசல் விலை உயர்வை மேற்கொள்ளாமல் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும். அது இயலாத பட்சத்தில் விலை உயர்வு என்பது நிகழ வாய்ப்புள்ளதாக எண்ணெய் நிறுவன அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
The post ஈரான்-இஸ்ரேல் இடையே ஏவுகணை தாக்குதல் தீவிரம்; இந்தியாவில் பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயரும் அபாயம்: கச்சா எண்ணெய் இறக்குமதியில் பாதிப்பு அச்சம் மாற்று ஏற்பாடு செய்யும் எண்ணெய் நிறுவனங்கள் appeared first on Dinakaran.