அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல்

ஜெருசலேம்: ஈரானின் அணு ஆயுதத் திட்டத்துக்கு அச்சுறுத்தலாக ட்ரம்ப் இருப்பார் என்பதால் அவரை கொல்ல திட்டமிட்டுள்ளதாகவும், ஈரான் மூலம் உலகுக்கு ஏற்படும் அணு ஆயுத அச்சுறுத்தலை ஒழிக்கத் தேவையானதை செய்வோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

ஈரானின் தெஹ்ரானில் ஈரானிய இஸ்லாமிய புரட்சிகர காவல்படை தலைமையகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இஸ்ரேல் ராணுவத்தின் இந்த தாக்குதல் நடவடிக்கைக்கு ‘ஆபரேஷன் ரைசிங் லயன்’ என பெயரிடப்பட்டுள்ளது. ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் அரசாங்கம் தெரிவித்துள்ளது. அதேநேரம் இந்த தாக்குதல் மூலம் இஸ்ரேல் போர் பிரகடனம் செய்திருப்பதாக ஈரான் தெரிவித்து உள்ளது.

இதையடுத்து இஸ்ரேலுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையாக, இஸ்ரேலின் டெல் அவிவ் உள்ளிட்ட பல்வேறு முக்கிய நகரங்களின் மீது ஈரான் எதிர்தாக்குதல் நடத்தி வருகிறது. இதனையொட்டி இஸ்ரேலின் வான் எல்லை மூடப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் பெரும் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலையில், ஈரான் அரசு தங்கள் அணு ஆயுத தயாரிப்பு திட்டத்தின் முதல் எதிரியாக அமெரிக்க அதிபரை கருதுவதாகவும், டொனால்டு டிரம்ப்பை கொல்வதற்கு ஈரான் திட்டமிட்டுள்ளதாகவும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியிருப்பதாவது;
டொனால்டு டிரம்ப் ஒரு தீர்க்கமான தலைவர். ஈரான் அரசிடம் பேரம் பேசுவதற்கான பாதையை டிரம்ப் தேர்ந்தெடுக்கவில்லை. போலி ஒப்பந்தத்தை அவர் கிழித்தெறிந்தார். காசிம் சுலைமானியை கொலை செய்தார். ஈரான் அரசிடம் அணு ஆயுதம் இருக்கக் கூடாது என்பதில் அவர் உறுதியாக உள்ளார். எனவே ஈரான் அரசு டிரம்ப்பை தனது முதல் எதிரியாக கருதுகிறது. ஈரானின் அணு ஆயுத திட்டத்தை எதிர்ப்பதில் டிரம்பின் ‘இளைய கூட்டாளி’ போல் நான் இருக்கிறேன். எனவே ஈரான் என்னையும் குறிவைத்துள்ளது. எனது படுக்கையறை ஜன்னல் அருகே ஏவுகணை வீசப்பட்டது. இஸ்ரேல் தற்போது அணு ஆயுத அச்சுறுத்தலை எதிர்கொண்டு வருகிறது. எனவே ஆக்ரோஷமாக செயல்படுவதைத் தவிர எங்களுக்கு வேறு வழியில்லை. அணுசக்தி மற்றும் ஏவுகணை அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்கு தேவையான அனைத்தையும் செய்ய இஸ்ரேல் தயாராக உள்ளது என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

The post அமெரிக்க அதிபரை கொல்ல ஈரான் திட்டம்: இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு தகவல் appeared first on Dinakaran.

Related Stories: