நாமக்கல், ஜூன் 16: புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம், மாவட்டம் முழுவதும் 879 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை 12 ஆயிரம் பேர் எழுதினர்.தமிழகத்தில் பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககம், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் மூலம் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத -படிக்க தெரியாதவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு 2022-23 முதல் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் அனைவருக்கும் எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
கல்லாதவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை மத்திய- மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. நாமக்கல் மாவட்டத்தில், இந்த திட்டத்தின் கீழ் கடந்த 3 ஆண்டுகளில் சுமார் 60 ஆயிரம் பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கபப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில், நாமக்கல் மாவட்டம் முழு எழுத்தறிவு பெற்ற மாவட்டமாக மாற்றப்பட உள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 15 வயதிற்கு மேற்பட்ட எழுத -படிக்க தெரியாதவர்கள் முழுமையாக கணக்கெடுக்கப்பட்டு அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
நடப்பு கல்வி ஆண்டில், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 15 வட்டாரங்களிலும், 12 ஆயிரத்து 889 கற்போர்களுக்கு கடந்த நவம்பர் மாதம் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த பணியில் 900க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் ஈடுபட்டனர். அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு பயிற்சி அளிக்க, பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் மூலம் தன்னார்வலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அவர்கள் கல்லாதவர்களுக்கு பயிற்சி அளித்தனர். பயிற்சி காலம் முடிவடைந்ததை தொடர்ந்து, நேற்று மாவட்டம் முழுவதும் 879 அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், கற்போருக்கான அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வினை சுமார் 12 ஆயிரம் பேர் எழுதினார்கள்.
அதிகப்பட்சமாக மல்லசமுத்திரம் ஒன்றியம், மாமுண்டி அரசு நடுநிலைப்பள்ளிக்கு உட்டபட்ட 6 மையங்களில் 181 பேர் எழுதினர். தேர்வு காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. கற்போரின் வசதிப்படி அவர்கள் விரும்பும் நேரத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வு பணியில், அரசு துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் என மொத்தம் 1776 பேர் ஈடுபட்டனர். நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வம் ஆகியோர் காவேட்டிப்பட்டி, பெரியப்பட்டி உள்ளிட்ட பல்வேறு மையங்களுக்கு சென்று கற்போர்கள் தேர்வு எழுதுவதை பார்வையிட்டனர். வட்டார அளவில் வட்டார கல்வி அலுவலர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் மற்றும் ஆசிரியர் பயிற்றுநர்கள் ஆகியோர் தேர்வு மையங்களை பார்வையிட்டு தேர்வுக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதுகுறித்து கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘அடிப்படை எழுத்தறிவு தேர்வு நேற்று மாவட்டம் முழுவதும் நடத்தப்பட்டது. இதன் விடைத்தாள்கள் நாளை(இன்று) முதல் அந்தந்த வட்டார வள மையங்களில் ஆசிரியர்கள் பயிற்றுனர்கள், தன்னார்வலர்கள், பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் மதிப்பீடு செய்யப்படுகிறது,’ என்றனர்.
The post மாவட்டத்தில் 879 மையங்களில் அடிப்படை எழுத்தறிவு தேர்வு appeared first on Dinakaran.