உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பைலட் உட்பட 7 பேர் பரிதாப பலி: மோசமான வானிலை காரணமாக விபத்து

ருத்ரபிரயாக்: உத்தரகாண்ட் மாநிலம் கேதர்நாத் அருகே ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து விபத்துக்குள்ளாகியதில் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். இந்த விபத்தை தொடர்ந்து 2 நாட்களுக்கு ஹெலிகாப்டர் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. உத்தரகாண்டின் குப்தகாஷியில் இருந்து தனியார் ஹெலிகாப்டர் ஒன்று நேற்று காலை 5 மணிக்கு கேதார்நாத் கோயிலுக்கு பயணிகளை ஏற்றி சென்றது. பின்னர் அங்கிருந்து குப்தகன்ஷி என்ற இடத்துக்கு ஹெலிகாப்டர் புறப்பட்டு சென்ற நிலையில் கவுரி குந்த் வன பகுதியில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்தது.

இதில், ஹெலிகாப்டரின் பைலட் உட்பட 7 பேர் பலியாகினர். விபத்தில் பலியானவர்கள் மகாராஷ்டிரா, ராஜஸ்தான்,உத்தரகாண்ட், உபி மாநிலத்தை சேர்ந்தவர்கள். மகாராஷ்டிரா மாநிலம் யவத்மாலை சேர்ந்த தொழிலதிபர் ராஜ்குமார் ஜெய்ஸ்வால், அவரது மனைவி மற்றும் 2 வயது குழந்தையும் பலியாகி உள்ளது. விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரின் பைலட் ராஜ்வீர் சிங் சவுகான் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர். இவர் இந்திய ராணுவத்தில் 15 ஆண்டுகள் பைலட்டாக பணிபுரிந்துள்ளார். பல்வேறு ரக ஹெலிகாப்டர்களை இயக்கிய அனுபவம் கொண்டவர்.மோசமான வானிலை காரணமாக ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் பெல் 407 ரகத்ைத சேர்ந்தது. இது ஆர்யன் ஏவியேஷன் நிறுவனத்துக்கு சொந்தமானது.

இந்த விபத்தை தொடர்ந்து சார்தாம் யாத்திரைக்கான ஹெலிகாப்டர் சேவையை 2 நாள் ரத்து செய்ய முதல்வர் புஷ்கர் சிங் தாமி உத்தரவிட்டுள்ளார். இந்த விபத்தையடுத்து நிலைமை குறித்து விவாதிக்க மாநில அரசு உயர் அதிகாரிகளின் கூட்டத்தை முதல்வர் தாமி கூட்டினார். அப்போது முதல்வர் தாமி பேசுகையில்,வானிலை மோசமாக உள்ளதால் ஹெலிகாப்டர் சேவை 2 நாள் ரத் து செயயப்பட்டுள்ளது.பயணிகளின் பாதுகாப்புக்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.ஹெலிகாப்டர் சேவைக்கான நிலையான செயல்பாட்டு முறைகள் வகுக்கப்படும். புதிதாக கட்டுப்பாடு மற்றும் கட்டளை அறை உருவாக்கப்படும். விபத்துக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.

குஜராத் மாநிலம் அகமதாபாத், சர்தார் வல்லபாய் படேல் விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் கீழே விழுந்து வெடித்ததில் 241 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த விபத்து நடந்து 3 நாட்கள் ஆன நிலையில் ஹெலிகாப்டர் விபத்து ஏற்பட்டுள்ளது.இந்த விபத்து குறித்து விமான விபத்து புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்தும் என ஒன்றிய சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகம் அறிவித்துள்ளது.

5 விபத்துகளில் 13 பேர் பலி
உத்தரகாண்டில் உள்ள சார்தாம் புனித யாத்திரைக்கு செல்லும் பக்தர்களுக்கு வசதியாக ஹெலிகாப்டர்கள் இயக்கப்படுகிறது. இந்த மாநிலத்தில் ஹெலிகாப்டர்கள் விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கின்றன. அதே போல் இயந்திர கோளாறு,வானிலை பிரச்னை ஆகியவற்றினால் ஹெலிகாப்டர்கள் அவசரமாக தரையிறக்கம் அடிக்கடி நடைபெறுகிறது. இது அங்கு உள்ள மக்களுக்கும், அரசு நிர்வாகத்தினருக்கும் கவலையை ஏற்படுத்தும் நிகழ்வாக கருதப்படுகிறது. கடந்த மாதம் 2ம் தேதியில் இருந்து இதுவரை அந்த மாநிலத்தில் 5 ஹெலிகாப்டர் விபத்துக்கள் நிகழ்ந்துள்ளன. இதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post உத்தரகாண்டில் ஹெலிகாப்டர் விழுந்து தீப்பிடித்ததில் பைலட் உட்பட 7 பேர் பரிதாப பலி: மோசமான வானிலை காரணமாக விபத்து appeared first on Dinakaran.

Related Stories: