துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் தேவை இல்லை: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து

சேலம்: துணைவேந்தர்கள் நியமனம் விவகாரத்தில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது என மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் சஹகார் பாரதி கூட்டுறவு அமைப்பின் தமிழ்நாடு பிரிவு மாநில மாநாடு நேற்று சேலத்தில் நடந்தது. இதில், சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்ட மகாராஷ்டிரா மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பேசுகையில், ‘குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கூட்டுறவு அமைப்புகள் மிக நன்றாக செயல்படுவதற்கான காரணங்களை, மற்ற மாநிலங்கள் தெரிந்து கொண்டு செயல்படுத்த வேண்டும்.

தேர்தலுக்காக உறுப்பினர்களைச் சேர்க்காமல் உண்மையான விவசாயிகள், நெசவாளர்கள், தொழிலாளர்கள் கூட்டுறவு அமைப்பில் உறுப்பினர்களாக சேர்க்கும்போதுதான் அவை வலுப்பெறும். கூட்டுறவு இயக்கம் மக்கள் இயக்கமாக மாறும் போது, 2047-ல் உலகின் வல்லரசு நாடு இந்தியா என்ற நிலை உருவாகும்,’ என்றார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கேரளா பல்கலைக்கழங்களில் துணைவேந்தர்கள் நியமிப்பது தொடர்பான வழக்கில், ஆளுநருக்கு தான் துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரம் உள்ளது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

தமிழக அரசின் வழக்கில், ஒரு ஆளுநர் சட்டசபை தீர்மானத்தில் முடிவெடுப்பதற்கான காலவரம்பு குறித்து தெரிவித்துள்ளது. என்னை பொறுத்தவரை, துணைவேந்தர்கள் நியமனம் என்பது, ஆளுநரின் உரிமை மற்றும் அதிகாரத்திற்கு உட்பட்டது தான். அதில் தேவையற்ற மாற்றங்களை செய்யக்கூடாது. தமிழகத்தில், ஆளுநருக்கும் அரசுக்கும் இடையே மோதல் போக்கு நிலவுவதற்கான காரணம், புதிய மொழியாக்கத்தை கொடுத்தது தான் இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டுறவு வங்கியில் சிபில் ஸ்கோர் அடிப்படையில் கடன் வழங்குவது குறித்த கேள்விக்கு பதிலளித்த சி.பி.ராதாகிருஷ்ணன், ‘கடன் நிராகரிக்கப்பட்டால் அது எந்த காரணத்திற்காக நிராகரிக்கப்பட்டது என்ற விளக்கத்தை அளிக்க வேண்டும். விவசாயிகளின் கோரிக்கைகளில் அடிப்படையில் சிபில் ஸ்கோர் முறையில் மாற்றங்களைக் கொண்டு வந்து கடன் வழங்குவதை எளிமைப்படுத்த வேண்டும்,’ என்றார்.

The post துணைவேந்தர்கள் நியமனத்தில் மாற்றம் தேவை இல்லை: மகாராஷ்டிரா ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் கருத்து appeared first on Dinakaran.

Related Stories: