தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே எடப்பாடிக்கு வேலையாகி விட்டது: அமைச்சர் ரகுபதி தாக்கு

சென்னை: தினமும் காலையில் தூங்கி எழுந்த உடனே பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே எடப்பாடிக்கு வேலையாகிவிட்டது என்று அமைச்சர் ரகுபதி சாடினார். சென்னை கொரட்டூரில் உள்ள தனியார் மண்டபத்தில் திமுக சார்பில் கலைஞர் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. அமைச்சர்கள் ரகுபதி, சேகர்பாபு, அம்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஜோசப் சாமுவேல், சென்னை மேயர் பிரியா, அம்பத்தூர் மண்டலக்குழு தலைவர் பி.கே.மூர்த்தி, பகுதிச் செயலாளர் நாகராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின்போது 15 கருணை இல்லங்களுக்கு ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் உபகரணங்களை அமைச்சர்கள் வழங்கினர். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரகுபதி கூறியதாவது: அமைச்சர் சேகர்பாபு பழனியில் முருகர் பக்தர் மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்தார். தமிழகத்தில் ‘ராமா ராமா’ என்று சொல்லி பார்த்தார்கள். அது எடுபடவில்லை. தமிழ் கடவுள் முருகன் பெயரை சொல்லியாவது மாற்று வேடத்தில் வரலாம் என உள்ளே வருகின்றனர்.

தமிழ்நாட்டு மக்கள் ஏமாளிகள் இல்லை. தமிழ்நாட்டு மக்களை முருகன் பெயரை சொல்லி ஏமாற்ற முடியாது. கிரிமினல் குற்றவாளிக்கு அடைக்கலம் தருகின்ற கட்சி பாஜ. ஆனால் கட்சியில் கிரிமினல்கள் இருக்கிறார்கள் என தெரிந்தால் உடனே அவர்களை வெளியேற்றும் கட்சி திமுக. பூனை கண்ணை மூடிக்கொண்டால் இருண்டு விடும் என்று சொல்வார்கள். அதுபோல எடப்பாடி பழனிசாமிக்கு எதை பார்த்தாலும் பாதுகாப்பு இல்லை என சொல்வதே பழக்கமாக போய்விட்டது.

அவர் காலையில் எழுந்த உடனே பாதுகாப்பு இல்லை என சொல்வதும், கூச்சல் இடுவதும் அவருடைய தினசரி பணியாகிவிட்டது. கீழடி நாகரிகத்தை உலகத்திற்கு கொண்டு சேர்த்தவர் தமிழ்நாடு முதலமைச்சர். அவர் மட்டும் முயற்சி எடுக்காமல் இருந்திருந்தால் கீழடி நாகரிகம் இருக்கிறது என்பது தெரியாமல் போயிருக்கும். அதற்கு முழு முயற்சி எடுத்த அரசு திமுக அரசு. மற்றவர்கள் எதை சொன்னாலும் தமிழ்நாட்டு மக்கள் நம்ப மாட்டார்கள்.

தொன்மையான நாகரிகத்தை உலகத்திற்கு எடுத்துக்காட்டுவதில் முதலமைச்சரரை விட வேற யாரும் இல்லை. எடப்பாடி பழனிசாமி விவசாயி இல்லை. தோளில் கலப்பை வைத்தவர்கள் எல்லாம் விவசாயிகள் இல்லை. அவர் எந்த களத்தில் இறங்கி விவசாயம் செய்தார். அவர் போலி விவசாயி என முதலமைச்சர் சொல்வதில் தவறு இல்லை. இவ்வாறு அவர் பேசினார். இந்த நிகழ்ச்சிக்கு 88வது வார்டு மாமன்ற உறுப்பினர் நாகவள்ளி ஏற்பாடு செய்திருந்தார்.

The post தினமும் காலையில் தூங்கி எழுந்ததும் பாதுகாப்பு இல்லை என்று கூறுவதே எடப்பாடிக்கு வேலையாகி விட்டது: அமைச்சர் ரகுபதி தாக்கு appeared first on Dinakaran.

Related Stories: