சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு

பெரம்பூர்: சென்னை கிழக்கு மாவட்ட திமுக சார்பில், கலைஞரின் பிறந்த நாள் மற்றும் செம்மொழி நாளை முன்னிட்டு ஓட்டேரி, மங்களபுரம், சந்திரயோகி சமாதி சாலையில் நேற்று மாலை பொதுக்கூட்டம் நடைபெற்றது. 74வது (அ) வட்ட செயலாளரும் வழக்கறிஞருமான கிருஷ்ணகுமார் ஏற்பாட்டில், அமைச்சர் பி.கே.சேகர்பாபு முன்னிலை வகித்தார். கூட்டத்தில் அமைச்சர் பி.மூர்த்தி, தலைமை கழக பேச்சாளர் மதுக்கூர் ராமலிங்கம், முனைவர் எழிலரசி சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் அமைச்சர் சேகர்பாபு பேசுகையில், மக்களின் ஆரவாரமும் மகிழ்ச்சியும் இருக்கும் ஒரே இடம் திமுக நடத்தும் கூட்டங்கள்தான். வரும் 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 2வது முறையாக பதவியில் அமரவிருக்கும் முதல்வருக்கு, சென்னை கிழக்கு மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றியை பரிசாக அளிப்போம். அதேபோல், மற்ற தொகுதிகளைவிட சென்னை கிழக்கு மாவட்டத்தின் 6 சட்டமன்ற தொகுதிகளில் பெருவாரியான வாக்குகளை பெற்று, முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க நாம் அனைவரும் சூளுரைப்போம்’ என்றார்.

அமைச்சர் பி.மூர்த்தி பேசுகையில், நாம் எப்போதோ தேர்தல் பணிகளை துவங்கிவிட்டோம். எங்களிடையே சிறந்த முறையில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதில்தான் போட்டி நிலவுகிறது. நமது முதல்வர் 2வது முறையாக முதல்வராக பதவியேற்க இருக்கிறார். அவருக்கு அதிகப்படியான வாக்குகளை யார் பெற்றுத் தரப்போகிறார்கள் என்பதில்தான் எங்களுக்குள் போட்டி நிலவுகிறது. ஒவ்வொரு தேர்தல் நேரத்திலும் பணிக்கு வந்து செல்லக்கூடியது திமுக இயக்கம் அல்ல. அது, எப்போதும் மக்களுக்காக முன்நிற்கக்கூடிய இயக்கம் என்பதில் எவ்வித மறுப்பும் இல்லை. திமுகவை பொறுத்தவரை போட்டி போட்டு கட்சியை வளர்ப்பதற்கும் மக்களுக்கு முதலில் செய்திகளை கொண்டு சேர்ப்பதில்தான் எங்களுக்குள் போட்டி இருக்கும்’ என்றார். கூட்டத்தில் மேயர் பிரியா, கலாநிதி வீராசாமி எம்பி, தாயகம் கவி எம்எல்ஏ, மண்டல குழு தலைவர் சரிதா மகேஷ்குமார், பகுதி செயலாளர்கள் சாமிக்கண்ணு, தமிழ்வேந்தன், தொகுதி பொறுப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, புஷ்பராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

 

The post சட்டமன்ற தேர்தலில் முதல்வருக்கு வெற்றியை அன்பளிப்பாக வழங்க சூளுரைப்போம்; அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேச்சு appeared first on Dinakaran.

Related Stories: