ஊட்டி : ஊட்டியில் லேசான காற்றுடன் கூடிய மழை பெய்ததால், குளிர் அதிகமாக காணப்பட்டது. நீலகிரி மாவட்டத்தில் ஜூன் மாதம் முதல் வாரம் துவங்கும் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து மூன்று மாதங்கள் கொட்டித் தீர்க்கும்.
இச்சமயங்களில், விவசாயிகளுக்கு தேவையான தண்ணீர் கிடைக்கும். இதனால், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படும். குறிப்பாக, மலைப்பாங்கான பகுதிகளில் கூட விவசாயம் மேற்க்கொள்வார்கள். சமீப காலமாக தென்மேற்கு பருவமழை குறித்த சமயத்தில் பெய்யாமல் இருந்தது. ஆனால், கடந்த மூன்று ஆண்டுகளாக குறித்த சமயத்தில் பருவமழை துவங்கி பெய்கிறது.
மேலும், வடகிழக்கு பருவமழையும் கடந்த ஆண்டு போதுமான அளவு பெய்தது. மேலும், இந்த ஆண்டு கடந்த மார்ச் மாதம் முதலே அவ்வப்போது மழை பெய்து வந்தது. கடந்த மாதம் யாரும் எதிர் பார்க்காத நிலையில், சுமார் 10 நாட்கள் கனமழை கொட்டியது. இதனால், பெரும்பாலான அணைகள் நிரம்பின.
தற்போது அனைத்து பகுதிகளும் பச்சை பசேல் என காட்சியளிக்கிறது. இந்நிலையில், நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதற்கு ஏற்றார் போல், கடந்த இரு நாட்களாக ஊட்டி, குந்தா, கூடலூர் மற்றும் பந்தலூர் போன்ற பகுதிகளில் மேக மூட்டம் மற்றும் அவ்வப்போது சாரல் மழை பெய்து வருகிறது. ஊட்டியில் நேற்று முன்தினம் இரவு முதல் மேக மூட்டம் மற்றும் லேசான காற்றுடன் கூடிய சாரல் மழை பெய்தது. நேற்றும் காலை முதல் ஊட்டியில் அவ்வப்போது சாரல் மழை பெய்து வந்தது. மேலும், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலும் இதே காலநிலை நீடித்தது.
ஊட்டியில் நேற்று காற்றுடன் கூடிய மழை பெய்யத் துவங்கியுள்ளதாலும், தொடர்ந்து வானம் மேக மூட்டத்துடனும் காணப்படுவதாலும் பருவமழை தீவிரமடைகிறதா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே, அணைகள் மற்றும் நீரோடைகளைில் ஓரளவு தண்ணீர் உள்ள நிலையில், இம்முறை குறித்த காலத்தில் பருவமழை பெய்தால், அணைத்து அணைகளும் நிரம்பி வழியும். அதே சமயம் விவசாயமும் செழிக்க வாய்ப்புள்ளது. நேற்று ஊட்டியில் மேக மூட்டம் மற்றும் சாரல் மழை காணப்பட்ட நிலையில், குளிரின் தாக்கமும் சற்று அதிகமாக காணப்பட்டது.
பந்தலூர்: பந்தலூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் நேற்று மேக மூட்டத்துடன் தொடர் மழை பெய்ததால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரிய விட்டவாறு வாகனங்களை இயக்கினர்.
மேலும் பகலில் ஓர் இரவு போல காட்சியளித்தது. அதனால் பஜார் பகுதிகளில் மக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில நாட்களாக வெயில் தாக்கம் அதிகரித்து காணப்பட்ட நிலையில் நேற்று குளிரின் தாக்கம் அதிகமாக இருந்தது. காலநிலை மாற்றம் காரணமாக பொது மக்களின் இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது.
The post காற்றுடன் கூடிய சாரல் மழை appeared first on Dinakaran.