உழவரை தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை முகாம்

 

அரியலூர், ஜூன் 14: திருமானூர் வட்டாரம் மல்லூர் கிராமத்தில் வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை முகாம், நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருமானூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் பரமசிவம் கலந்து கொண்டு பேசுகையில்; வேளாண்மை துறை மூலம் தற்போது செயல்படுத்தப்படும் கோடை உழவு மானியம், இயந்திர நடவு மானியம் மற்றும் பி.எம்.கிசான் திட்டத்தில் தொடர்ந்து நிதி உதவி பெற மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து பேசினார்.

பின்னர் பேசிய வேளாண்மை அலுவலர் சதீஷ், திருமானூர் வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பில் உள்ள நுண்சத்துக்கள், உயிர் உரங்களின் பயன்கள் மற்றும் உபயோகிக்கும் முறைகள் பற்றி எடுத்துக் கூறினார். இதன் பிறகு மண் பரிசோதனை நிலைய வேளாண்மை அலுவலர் ஜென்சி, மண் பரிசோதனையின் அவசியம் மற்றும் மண்வள அட்டையின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.

இதனைத் தொடர்ந்து தோட்டக்கலைத்துறை, கால்நடைத்துறை, வேளாண்மை பொறியியல் துறை வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர்கள் மற்றும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் ஆகியோர் தங்கள் துறைகளின் கீழ் விவசாயிகளுக்குகாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து எடுத்துக் கூறினர். துணை வேளாண்மை அலுவலர் கொளஞ்சி உளுந்து பயிரில் விதை நேர்த்தி பற்றி செயல் விளக்கம் செய்து காண்பித்தார். இதனைத் தொடர்ந்து மண் மாதிரி எடுக்கும் முறை பற்றிய செயல் விளக்கத்துடன் நிகழ்ச்சி நிறைவடைந்தது.

The post உழவரை தேடி வேளாண்மை, உழவர் நலத்துறை முகாம் appeared first on Dinakaran.

Related Stories: