இந்நிலையில் தமிழ்நாட்டில் எப்படியாவது காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் பாஜவின் டெல்லி தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதையடுத்து உள்துறை அமைச்சர் அமித்ஷா, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு இருக்கும் நிலையில் அவசரமாக அதிமுகவுடன் கூட்டணியை அமைத்துள்ளார். இனி எப்போதும் பாஜவுடன் கூட்டணி வைக்கமாட்டோம் என சத்தியம் செய்த எடப்பாடி பழனிசாமியை மிரட்டி கூட்டணியில் சேர்த்துள்ளார். அதுவும் கூட்டணி ஆட்சி அமைப்போம் எனவும் கூறி வருகிறார். இதனால் எடப்பாடி பழனிசாமி உள்பட 2ம்கட்ட தலைவர்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இந்நிலையில் பாஜ முன்னாள் தலைவரான அண்ணாமலை, சட்டமன்றத் தேர்தலில் பாஜ 78 இடங்களை பெற்று போட்டியிடவேண்டும் என்றும், அதிமுக கூட்டணியை விட, பாஜ கூட்டணிக்கு ஓட்டு சதவீதம் அதிகளவில் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் பாஜவுக்கு 30 இடங்களை ஒதுக்க அதிமுக முடிவு செய்திருந்த நிலையில், அண்ணாமலையின் ேபச்சு அதிமுக, பாஜ நிர்வாகிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி என கூறமாட்டேன் எனவும், பாஜ ஆட்சி அமைப்போம் எனவும் அண்ணாமலை கூறினார்.
இதற்கு எடப்பாடி பழனிசாமியின் நெருங்கிய ஆதரவாளரான வக்கீல் மணிகண்டன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அண்ணாமலை திட்டமிட்டே அதிமுக- பாஜ கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதற்காக இவ்வாறு கூறிவருவதாகவும், பாஜவில் அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது எனவும் கடுமையாக குற்றம்சாட்டினார். ஆனால் அண்ணாமலைக்கு அதிமுக முக்கிய தலைவர்கள் யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இந்நிலையில் அண்ணாமலைக்கு அதிமுகவினர் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமி தடை விதித்துள்ளார்.
‘பதவி பறிக்கப்பட்ட ஆத்திரத்தில் எதையாவது கூறிக்கொண்டிருப்பார். தேர்தல்பற்றி முடிவு எடுக்க அவருக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்பதை தெரிந்து கொண்டு இவ்வாறு கூறிவருகிறார். அவருக்கு பதில் அளித்து அவரை பெரிய நபராக்க வேண்டாம்’ என கூறியுள்ளார். இதன் காரணமாகத்தான் அண்ணாமலைக்கு யாரும் பதில் அளிக்கவில்லை. அதே நேரத்தில் தமிழக பாஜ தலைவராக இருக்கும் நயினார் நாகேந்திரனும் அண்ணாமலை மீது கடும் கோபத்தில் இருக்கிறார். அவரது நடவடிக்கை குறித்து அமித்ஷாவுக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவர்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
அதுவரை அவருக்கு யாரும் பதில் அளிக்க வேண்டாம் என எடப்பாடி பழனிசாமியிடம் தெரிவித்து சமரசம் பேசியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே எடப்பாடி பழனிசாமி கட்சியினருக்கு தடைவிதித்துள்ளார் எனவும் தெரிகிறது. இதுகுறித்து அதிமுக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘தலைவர் பதவி பறிக்கப்பட்டதால் அண்ணாமலையால் சும்மா இருக்க முடியவில்லை. அவர் பாஜவில் இருந்து வெளியேற முடிவு செய்துள்ள நிலையில், அவர்களாகவே கட்சியில் இருந்து நீக்கட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார். இதற்காகவே அமித்ஷா எச்சரிக்கையையும் மீறி செயல்படுகிறார்,’’ என்றனர்.
The post 78 தொகுதிகள் கேட்க வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் அண்ணாமலைக்கு பதில் அளிக்க அதிமுகவினருக்கு எடப்பாடி தடை: அமித்ஷாவிடம் நயினார் புகார் appeared first on Dinakaran.