வேலூர், ஜூன் 14: காட்பாடி அடுத்த சேர்க்காட்டில் கட்டி முடிக்கப்பட்டுள்ள தாலுகா மருத்துவமனை வளாகத்தை நேற்று அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இம்மாத இறுதியில் வேலூர் மாவட்டத்துக்கு வருகை தர உள்ளார். அப்போது வேலூர் ஜிபிஎச் வளாகத்தில் ரூ.198 கோடியில் கட்டி முடிக்கப்பட்டுள்ள வேலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் அரசு பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையையும், காட்பாடி தாலுகா சேர்க்காட்டில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் 100 படுக்கை வசதிகளுடன் கட்டி முடிக்கப்பட்டுள்ள தாலுகா அரசு மருத்துவமனையையும் திறந்து வைக்கிறார்.
இதனால் வேலூர் ஜிபிஎச் வளாகத்தில் உள்ள பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையில் இறுதிக்கட்டப்பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதுடன், ஜிபிஎச் சாலையில் புதிய தார்ச்சாலை அமைக்கும் பணியும் முழுவீச்சில் நடந்து வருகிறது. அதேபோல் நேற்று சேர்க்காட்டில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்காக காத்திருக்கும் அரசு தாலுகா மருத்துவமனையில் மருத்துவமனைக்கான அனைத்து கட்டமைப்புகளும் முழுமையாக செய்து முடிக்கப்பட்டுள்ளதா? என்று தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், கலெக்டர் சுப்புலட்சுமி ஆகியோர் நேற்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வின்போது வேலூர் மாநகர துணை மேயர் சுனில்குமார், ஒன்றியக்குழு தலைவர் வேல்முருகன், துணைத் தலைவர் சரவணன், தாசில்தார் ஜெகதீஸ்வரன் உட்பட பலர் இருந்தனர்.
The post அரசு மருத்துவமனையில் அமைச்சர், கலெக்டர் ஆய்வு சேர்க்காட்டில் ரூ.60 கோடியில் கட்டப்பட்ட appeared first on Dinakaran.