தமிழர் பகுதி வீடுகள் இடிப்பு டெல்லி முதல்வர் ரேகாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

புதுடெல்லி: தமிழர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். டெல்லியில் குடிசை பகுதி மற்றும் ஆக்கிரமிப்பு ஆகியவற்றை டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் அடிப்படையில் அரசு கையகப்படுத்தி வருகிறது. இதில் குறிப்பாக தமிழர்கள் அதிகம் வசிக்கக் கூடிய மதராசி முகாம் பகுதியில் இருந்த அனைத்து வீடுகளையும் கடந்த 1ம் தேதி புல்டோசர் கொண்டு இடித்து தரைமட்டமாக ஆக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு ஒரு கோரிக்கை கடிதம் எழுதியுள்ளார். அதனை நாடாளுமன்ற எம்பி டி.ஆர்.பாலு நேற்று வழங்கினார். அப்போது டெல்லிக்கான தமிழ்நாடு சிறப்பு பிரதிநிதி ஏ.கே.எஸ்.விஜயன் மற்றும் தமிழ்நாடு உள்ளுறை ஆணையர் ஆஷிஷ் குமார் ஆகியோர் உடன் இருந்தனர். தமிழ்நாடு முதல்வர் கடிதத்தில், ‘‘கடந்த 1ம் தேதியன்று ஜங்புராவின் மதராசி முகாம் இடிக்கப்பட்டதால் ஏற்பட்ட மனிதாபிமான நெருக்கடிக்கு உங்கள் அவசர கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். இது பல தசாப்தங்களாக டெல்லியின் பொருளாதாரத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வரும் 370 தமிழ் வம்சாவளி குடும்பங்களை வீடற்றவர்களாகவும், ஆதரவற்றவர்களாகவும் மாற்றியுள்ளது.

டெல்லி உயர்நீதிமன்றத்தின் உத்தரவுகளின்படி, ஒரு கூட்டு கணக்கெடுப்பு 189 குடும்பங்களை அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு தகுதியுடையவர்கள் என்று சான்றளித்துள்ளது. மீதமுள்ள 181 குடும்பங்களுக்கு மாற்று தங்குமிடம் வழங்கப்படாமல் இருப்பதால், அவர்கள் அனைவரும் வீடற்றவர்களாக விடப்பட்டுள்ளனர்.இந்த நெருக்கடியின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு இடம்பெயர்ந்த குடும்பங்களின் சிரமத்தைப் போக்க உடனடியாகச் செயல்படவும், பின்வரும் நடவடிக்கைகளை எடுக்கவும் வேண்டும் என்று உங்கள் அரசாங்கத்தை நான் வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

The post தமிழர் பகுதி வீடுகள் இடிப்பு டெல்லி முதல்வர் ரேகாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Related Stories: